மிகச் சிறந்த தமிழ்ப் புலமையாளரின் இலக்கியத்தை காரை மண் தந்துள்ளது! ‘காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல்’ அறிமுக விழாவில் ‘செந்தமிழ்ச் சொல்லருவி’ லலீசன் உரை

மிகச் சிறந்த தமிழ்ப் புலமையாளரின் இலக்கியத்தை காரை மண் தந்துள்ளது!

Laleesan Photo

 

 

 

 

 

 

'காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல்' அறிமுக விழாவில் 'செந்தமிழ்ச் சொல்லருவி' லலீசன் உரை

 

 

காரைநகர் அன்னை இன்று இன்னும் அக மகிழ்கின்றாள். எந்தத் துறை சார்ந்தாலும் அந்தத் துறை சார்ந்து முதன்மையானவர்களைத் தந்த மண்ணாக காரைநகரைப் பார்க்கின்றோம். அப்படிப்பட்ட பெருமைக்குரிய இந்தப் பதியானது மிகச் சிறந்த தமிழ்ப் புலமையாளரது இலக்கியத்தைத் தந்துள்ளது. அத்தகைய இலக்கியங்கள் அழியாது அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது என்கின்ற நம்பிக்கையினை ஏற்படுத்தும் வகையில் இந்த நூல் பதிப்பாக்கம்செய்து வெளியிடப்பட்டுள்ளமை பாராட்டுக்குரிய சிறந்த வரலாற்றுப் பணியாகும்.

இவ்வாறு சென்ற 12-01-2017ல் காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றிருந்த 'காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல்' வெளியீட்டு விழாவில் ஆய்வுரை வழங்கிய கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பிரதி முதல்வர் 'செந்தமிழ்ச் சொல்லருவி' ச.லலீசன் தெரிவித்தார். புலவரின் பாடல்கள் சிலவற்றை எடுத்து அவற்றிற்கான பொருள்களையும் அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகளையும் சுவை படக்கூறியதுடன் அவ்வப்போது  பாடல்களுடன் தொடர்புபடுத்தி காரை மண்ணின் மகத்துவத்தினை எடுத்துக் கூறிய இவரது உரை சபையின்கண் சமூகமளித்திருந்த அறிஞர்களை மட்டுமல்லாது சாதாரண மக்களையும் வெகுவாகக் கவர்ந்திருந்தது.

லலீசன் தமது ஆய்வுரையில் மேலும் தெரிவித்ததாவது:

ஒரு ஊரிலே பிச்சைக்காரன் ஒருவன் மர நிழலின் கீழேயிருந்து போகின்றவர்கள் வருகின்றவர்களிடம் அம்மா பிச்சை! ஐயா பிச்சை! என யாசித்துக்கொண்டிருந்தான். இந்த யாசித்தலுக்கு அந்த ஊரே உதவி செய்தது. திடீரென அந்தப் பிச்சைக்காரன் அந்த இடத்திலேயே இறந்து விட்டான். ஊர்ப் பெரியவர்கள் ஒன்று கூடி தங்கள் ஊரிலே பிச்சை எடுத்தவனுக்கு என்ன கைமாறுசெய்யலாம் என சிந்தித்தார்கள். இந்த ஊரிலே வாழ்ந்து இந்த ஊரிலே பிச்சை எடுத்து இந்த ஊர்ச் சோற்றை உண்டு உடம்பு வளர்த்த பிச்சைக்காரனை அந்த இடத்திலேயே அடக்கம் செய்து விடலாம் என முடிவு செய்தார்கள். அந்த இடத்தில் குழி தோண்டும்போது அவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. குழியிலிருந்து தங்கப்பாளங்கள் மிதந்து வந்தன. பிச்சைக்காரன் தனது காலடியிலே தங்கப்பாளங்கள் இருந்துள்ளன என்பதை மறந்து அல்லது மறைத்து போகின்றவர்கள் வருகின்றவர்களிடம் அம்மா பிச்சை! ஐயா பிச்சை! எனக் கேட்டுக்கொண்டிருந்தானே! என்ன கோலம்  இது என வியப்புற்றனர்.
ஒரு விதத்தில் நாங்களும் பிச்சைக்காரர்கள் தான்! சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் என மரபார்ந்த இலக்கியச் செல்வமும் செழுமையும் எங்களுடைய மொழிக்கு இருக்கிறது. அதன் வழி பயின்ற ஒரு மரபுக் கவிதைச் செல்வம் எங்களிடம் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் விடுத்து போகின்றவர்கள் வருகின்றவர்களிடம யாசகம் கேட்பதைப்போல கவிதை யாசகம் கேட்டு இலக்கிய யாசகம் கேட்டு வாழ்கின்ற மனிதர்களை இன்று பார்க்கின்றோம்.

ஒரு குழியிலே இருக்கக்கூடிய இன்னொரு தங்கப் புதையலாகத் தான் காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகளைப் பார்க்கின்றேன். அத்தகைய பெரும் செல்வத்தை காரைநகரிலே வாழ்ந்த புலவர் ஈழத்து இலக்கிய அன்னைக்கு சமர்ப்பணம் செய்திருக்கின்றார். 

இவரது கவிதையோட்டத்தை பார்க்கின்றபோது மிகச்  சில பாக்களைத்தான் இவர் பாடியிருப்பாரா எனக் கேட்கத் தோன்றுகின்றது. நிச்சயமாகவில்லை. இந்த நுர்ல் 75 பக்கங்களைக்கொண்ட சிறிய கையடக்க நுர்லாக மலர்ந்திருக்கிறது. இவருடைய சேகரிப்பு மிக அதிகமாக இருந்திருக்கும். துரதிஷ்டவசமாக அவை எமது கைக்கு கிடைக்கவில்லை.

புலவருடைய பேரனார் அரிதில் முயன்று வெளிநாடுகளில் இருந்தெல்லாம் இந்த இலக்கியங்களைப் பெற்று அழகுற நூலாக தொகுத்திருக்கின்றார். 2009ல் இந்த நூல் அழகாக வெளிவந்துள்ளது. என்னுடைய குருநாதர் பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்கள் மிகச் சிறப்பான அணிந்துரையை இந்நூலுக்கு வழங்கியுள்ளார். 

இவருடைய பாடல்களை பொருள்பட உரைப்பதிலே இரண்டு வகுதிகளை உள்ளே பார்க்கின்றேன். ஒன்று சமூகம் சார்ந்தது. மற்றையது பக்தி அல்லது சமயம் சார்ந்தது. சமூகம் சார்ந்து இன்னும் பல பாடல்களைப் பாடியிருப்பார் எனக் கருதினாலும்  அக்காலத்து யாழ்ப்பாணத்துச் சமூகத்தின் நிலை குறித்துப் பாடிய ஒரு கும்மி மாத்திரம் கிடைத்திருக்கின்றது. அந்தக் கும்மி ஒன்றே புலவருடைய பாட்டுத் திறத்தினை எங்களுக்கு பறைசாற்றுகின்றது. 
ஸ்ரீமான் சிதம்பரப்பிள்ளை நெவின்ஸ், வித்துவசிரோன்மணி ந.ச.பொன்னம்பலபிள்ளை ஆகியோருடைய தடத்திலே பயணித்த காரணத்தினால் அவர்களுடைய சொற்களைக் கேட்டுத்தான் புலவருடைய தமிழ் நடை பயில்கின்றது. புலவருடைய சொல்லாட்சி மிக அற்புதமானது. அவருடைய நாவிலே சரஸ்வதி நர்த்தனமாடுவதைப்போல புலவர் தனது சொல்லாட்சியை மிக அழகாகக் கையாண்டுள்ளார். புலவரிடத்தில் சொல்லாட்சியுடன் பொருளாட்சியும் இருந்திருக்கிறது. சொல்லாட்சியையும் பொருளாட்சியையும் ஒன்றுசேர சங்கமிக்கச் செய்து பயணிக்கின்ற வல்லமை நாகமுத்துப் புலவருக்கு கைவந்த கலையாகவுள்ளதைப் பார்க்கின்றேன். சமயம் சார்ந்து பதிகங்கள், ஊஞ்சல்கள், பக்திரசக் கீர்த்தனைகள் என பல பாடல்களை இவர் தந்திருக்கின்றார். ஆனால் தமிழ் மாணவன் என்ற வகையில் என்னை மிகவும் கவர்ந்தது சமூகம் சார்ந்து இவர் தந்திருக்கின்ற கலிகால வேடிக்கைக் கும்மியாகும். ஒரு புகைப்படப்பிடிப்பாளன் எப்படி ஒரு நிகழ்வினை புகைப்படம் எடுத்து அம்பலப்படுத்துகிறானோ அதேபோன்று 1925ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து மக்களுடைய நிலையினை புகைப்படப்பிடிப்பாளன் போன்று  இக்கும்மிப்பாடல்கள் ஊடாக படம் பிடித்துக்காட்டியுள்ளார். புலவருக்கு நிறைந்த திருக்குறள் ஆட்சியும் இருந்துள்ளது என்பதை திருக்குறளை இக்கும்மிப் பாடல்களிலே பொதித்து வைத்ததன் மூலம் உணரக்கூடியதாகவுள்ளது. 

ஒரு காலத்தினுடைய ஆட்சிபெற்ற இலக்கிய வடிவமாக கும்மிப் பாடல்கள் இருந்திருக்கிறது. மனதிலே தோன்றுகின்ற எண்ணங்களை ஆதங்கங்களை வெளிப்படுத்துகின்ற சிறப்பான வடிவமாக கும்மி இருந்துள்ளது. அந்தவகையிலே நாகமுத்தப் புலவர் அவர்கள் இதனை சிறப்பான முறையில் கையாண்டுள்ளார்.

அந்நிய நாட்டினிற் பீயேப் பட்டம் பெற்ற
ஆசார்பிர சங்கரைக் கூட்டிவந்து
இன்னிய செந்தமிழைப் பறங்கிப் பாடைக்
கேற்றுகின்றாரேடி ஞானப்பெண்ணே. 

என்ற பாடல் மூலமாக புலம்பெயர்ந்த நாட்டிலிருந்தோ அல்லது இந்தியாவிலிருந்தோ இந்த மண்ணுக்கு பிரசங்கிகள் வருவதை புலவர் விரும்பவில்லை என்பதை அறியமுடிகிறது. பண்டிதர் அருளம்பலவனாரின் திருவாசக உரை, பதிற்றுப்பத்து உரை, வித்துவான் F.X.C.நடராசாவின் இலக்கிய வரலாற்றுச் செய்திகள் என்பனவற்றை உலகமே காரைநகரைப் பார்த்துத்தான் அறிகிறது. அப்படியென்றால் காரைநகருக்கு எதற்காக பிற ஊர்களிலிருந்து அறிஞர்கள் வரவேண்டும் என்கின்ற நியாயமான கேள்வி புலவரிடம்  தொக்கி நிற்பதைப் பார்க்கிறேன்.

சொல்லுங் கருவிநூல் கற்றாரல்லர் கலை
தோய்ந்த விடய மறிந்தாரல்லர்
அல்லும் பகலும் பிரசங்க மென்றுதுண்
டச்சிட் டளிக்கின்றார் ஞானப்பெண்ணே.
 
எனக் கூறுகின்ற அந்தக் காலத்துப் பிரசங்கிமாரின் நிலை இந்தக்காலத்து எம்மவர்க்கும் பொருந்தும் என நான் நினைக்கின்றேன். கருவி நூலினைக் கற்றவானால் தான் ஒழுங்கான முறையில் வார்த்தைகளை செப்பமுடியும் என்கின்ற செய்தியை இப்பாடல் ஊடாக ஆணித்தரமாக வலியுறித்தியுள்ளார்.

எமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய அச்சுறுத்தல்  தமிழ்ப் பிரதேசங்கள் படிப்படியாக பறிபோய்கொண்டிருப்பதாகும். இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக சந்ததி விருத்தியின்மை காணப்படுகிறது. இதனைப் புலவர் 1925ஆம் ஆண்டே தீர்க்கதரிசியாகவிருந்து கங்கணம்கட்டி ஒரு செய்தியை  பின்வரும் கும்மிப்பாடல் மூலமாகச் சொல்லியிருக்கின்றார்.

பன்னும் முன்னாட் பெண்கள் பன்றிக் குட்டிபோட்ட
பான்மை பலமகர் பெற்றெடுத்தார்
மன்னுமின் நாளி லிரண்டொன் றிணிவில்போய்
மாளக் கொடுக்கின்றார் ஞானப்பெண்ணே.

காரைநகர் மக்கள் இணுவில் வைத்தியசாலைக்குச் சென்று இரண்டொரு பிள்ளைகளைப் பெற்ற பின்னர் நிறுத்தி விடுகிறார்களே! என தனது வேதனையை இப்பாடலில் பதிவுசெய்திருக்கிறார்.

'படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில' என்பது போல அநியாயங்களைச் செய்துவிட்டு அதற்குப் பரிகாரம் தேடுவதுபோல் சிவார்ச்சனை செய்கின்றார்களே என்ற புலவரின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக பின்வரும் பாடல் உள்ளது.

முன்னுஞ் சிலர் பஞ்ச பாதகங்கள் செய்து
முற்பணங் கையிலிருப்பதனாற்
பன்னும் சிவார்ச்சனை செய்து நிவாரணம்
பண்ணுகின்றாரேடி ஞானப்பெண்ணே.

காரைநகர் நாமுத்துப் புலவருடைய பாடல்கள் மண்ணோடு மண்ணாகிப் போகாமல் கறையானுக்கு இரையாகாமல் தீக்கு இரையாகி காற்றோடு காற்றாக கலக்காமல் அவருடைய பேரனார் கனக சிவகுமாரன் வரலாற்றிலே போற்றக்கூடிய மிகச் சிறப்பான பணியினைச் செய்திருக்கின்றார்.  


புலவருடைய நாமம் இந்த வையகம் உள்ளவரை தமிழ் உள்ளவரை வாழும். தமிழ் மாணவர்களுடைய ஆய்வுப் பொருளாக நாகமுத்துப் புலவர் அமையவேண்டும். புலவர் குறித்த ஆய்வுகள் செழிப்படையவேண்டும். தமிழ் ஆர்வலர் என்ற வகையிலும் ஆசிரியர்களுக்கு கற்றுக்கொடுப்பவன் என்ற வகையிலும் என்னை இங்கு அழைத்து நாகமுத்துப் புலவரை அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள். நான் ஆய்வுரை செய்தேன் என்பதைக் காட்டிலும் இதனூடாக இந்த நூலினை நூறு தடவைகள் படித்து புலவரை அறிந்துகொண்டேன்.


கடந்த ஆண்டு இந்த மண்டபத்தில் நடைபெற்ற 'சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த அருணாசல உபாத்தியாயர்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் நான் கலந்துகொள்ளமுடியாமல் போய்விட்டது. ஆயினும் கனடா சைவ சித்ததாந்த மன்றத்தினுடைய தலைவர் சிவநெறிச்செல்வர் விசுவலிங்கம் அவர்கள் சிக்கெனப் பிடித்து கொழும்புக்கு அழைத்து என்னைப் பேசவைத்தார். அதன் தொடர்ச்சியாக எமக்கிடையே பாசப் பிணைப்பு உருவானது. இதன் காரணமாக சைவ ஆசிரியர் கலாசாலைகளின் தோற்றத்திற்கு அடித்தளமிட்ட காரைநகர் பெற்றெடுத்த செல்வத்தை உணர்ந்துகொண்டேன். அதன் பயனாக தினக்குரல் ஆண்டு மலரிலே அருணாசல உபாத்தியாயர் குறித்த கட்டுரையை என்னால் எழுத முடிந்தது. அதேபோன்று நாகமுத்துப் புலவரைப் பற்றி தெளிவுறுவதற்கு இன்றைய அறிமுக விழா வழிசெய்திருக்கின்றது.