காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா

காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா

நாகமுத்துப் புலவர் காரைநகரில் அவதரித்து 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கும் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் வாழ்ந்தவராவார். சுப்பிரமணிய வித்தியாசாலையில் 35 ஆண்டுகள் இயற்றமிழ்ப் போதகாசிரியராகப் பணியாற்றியதன் மூலம் காரை மக்களுக்கு கல்விச் செல்வத்தினை அள்ளி வழங்கியவர். இதன் காரணமாக காரைநகர் மக்களால் 'சட்டம்பி நாகமுத்தர்' எனவும் அழைக்கப்பட்டவர்.  அந்நியர் ஆட்சிக் காலத்தில் பணிபுரிந்து சைவத் தமிழ்ப் பண்பாடும் கலை கலாசாரங்களும் நல்லொழுக்க நெறிகளும் தமிழ் வாசனையும் காரை மண்ணில் செழிக்கும்படி பணியாற்றியிருந்தவர் நாகமுத்துப் புலவர் அவர்கள்.
இவர் இயற்றிய இனிய ஏராளமான கவிதைகளில் பல காலவோட்டத்தினால் அழிந்து போயினவாயினும் ஏனையவற்றை தொகுத்து காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் என்ற பெயரிலான நூல் புலவரின் பேரனான கனடாவில் வதியும் திரு.கனக சிவகுமாரன் அவர்களால் பதிப்பிக்கப்பெற்று ரொறன்ரோ நகரில் சிறப்பாக வெளியீடுசெய்யப்பட்டிருந்தது. புலவர் அவர்கள் பிறந்து வாழ்ந்து பணியாற்றிய காரை மண்ணில் இந்நூலினை அறிமுகம் செய்து வைக்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்தைக் கருதி அறிமுக விழா ஒன்றினை எதிர்வரும் 2017ஆம் ஆண்டு; ஜனவரி மாதம் 12ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.00மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை திரு.கனக சிவகுமாரன் அவர்களும் 'கலாபூசணம்' பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் இணைந்து ஏற்பாடு செய்து வருகின்றனர். சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ள இவ் அறிமுக விழாவில் பல சைவத் தமிழ் அறிஞர்களும் பெரியார்களும் கலந்துகொண்டு உரையாற்றும் வகையிலும் புலவரின் கவித்துவம் காரை மண்ணின் மகத்துவம் ஆகியனவற்றை வெளிப்படுத்தும் வகையிலும் இவ்விழா அழகுற ஒழுங்கமைக்கப்பட்டு வருவதாக திரு.கனக சிவகுமாரன் தெரிவித்துள்ளார்.