பூமிப்பந்தில் பரந்து வாழும் காரைநகர் மாணக்கருக்கு ஓர் நற்செய்தி!

    பூமிப்பந்தில் பரந்து வாழும் காரைநகர் மாணக்கருக்கு

                                     ஓர் நற்செய்தி!

 

கடந்த வருடம்  26–9-2015 அன்று சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் அ,ஆ,இ பிரிவுகளில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் பரிசில்கள் பெற்ற கட்டுரைகளில் வாரம்தோறும் ஒரு மாணவரின் ஆக்கம் காரைநகர்.கோ, காரைநகர்.கொம், வெப் காரைஇந்து கனடா.கொம் இணையத்தளங்களில் பிரசுரிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

கொழும்பு இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் நிசாந்தன் ஜெயபாலசிங்கம் 2014ஆம் ஆண்டு எமது சபையால்  நடாத்தப்பட்ட இலத்திரனியல் மூலமான கட்டுரைப்போட்டியில் கலந்துகொண்டு மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொழுத்துவோம். என்ற கருத்துருவில் எழுதிய கட்டுரை முதலாம் இடம் பெற்று காரை இளவறிஞர் விருதினைப் பெற்றுக் கொண்டார். என்பது குறிப்பிடத்தக்கது.

 26–9-2015 அன்று யாஃ காரைநகர் இந்துக்கல்லூரி சயம்பு மண்டபத்தில் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சுட்டெண் 104 இ பிரிவில் கொழும்பு இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் நிசாந்தன் ஜெயபாலசிங்கம் கலந்துகொண்டு முதலாம் இடம் பெற்று காரை இளவறிஞர் விருதினைப் பெற்றுக் கொண்டார். இவரது ஆக்கம் அமரர் கலாநிதி  ஆ. தியாகராஜா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 17.07.2016இல் எமது சபையால் வெளியிட்டு வைக்கப்பட்ட தியாகச் சுடர் நினைவுத்தொகுப்பில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. 

1

 


 

 

 

 

 

 

 

புலம் பெயர் மக்கள் மத்தியில் தமிழ்மொழியின் எதிர்காலம்


 "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன்தோன்றிய மூத்த தமிழ்" என்று அனைத்துலக தமிழர்களாலும் பெருமையுடன் மார்புதட்டி உரிமை கொண்டாடப்படும்  செம்மொழி தமிழ் என்பது மிகையாகாது. எம் தமிழ் அன்னை உண்மையிலே உலகிலுள்ள அனைத்து மொழிகளைக்  காட்டிலும் பழமையும் பழமையிற் புதுமையும் இலக்கிய செறிவினையும் கட்டுக்கோப்பான இலக்கண வரம்பையும் புனிதத்துவத்தினையும்  மகத்துவத்தினையும் ஒருங்கே பெற்றவளாக காணப்படுகிண்றாள். இத்தகைய புகழினைப் பெற்ற எம் தமிழ் அன்னையை இந்த சிறு வியாசத்தினுள்ளே அடக்கி விட முடியாது.

தமிழின் தொன்மையும் சிறப்பும்    
"நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று இடித்துரைத்த நக்கீரர் தொல்காப்பியரும் ஒளவை, பரணர், கணியன் பூங்குன்றனார், கபிலர் ஓட்டகக்கூத்தர், போன்ற ஞானிகளும் "வெந்தோ போயினும் நொந்தோமாயினும் வந்தே மாதரம்" என்று வீரமுழக்கமிட்ட விடுதலைக் கவி பாரதியும் இராமாயண காவியத்தை படைத்த  கம்பரும் தமிழக் கடவுளான முருகப்பெருமானின் அற்புத லீலைகளை திருப்புகழ் என்னும் அற்புத காவியமாகத் தந்த அருணகிரிநாதரும் உலகத்திற்கே திருமறையாய் திகழும் திருக்குறளைப் படைத்த வான்  புகழ் கொண்ட வள்ளுவரும் ஓத ஓத செவிக்கு இன்மை பயக்கும் தேனூற்றை படைத்த மாணிக்கவாசகரும் சிலம்பின் மூலம் பெண்ணின் கற்பு நெறியை உயர்த்திய இளங்கோவடிகளும் எம்மொழியை கையாண்டு எம்மொழிக்கு இறவா இறைநிலைப் பேற்றினை அழித்தார்களா?  இல்லையெனின் எம்மொழியால் தான் இப்பெரும் புலவர்கள் அனைவரும் அமரத்துவம் அடைந்தனரா? என்று ஆராய்ந்தால் எம் மொழியினைக் கொண்ட அரும்பெரும் காவியங்களை படைத்த வரலாறு இனிது வியங்கும்.


வானளாவிய சிறப்படைந்த எம் மொழியை பற்றி ஆராயுமிடத்து அம்மொழியைக் கொண்டு எமக்கு நெற்றித் திலகமிட்ட எம் வீரத்தழிழ் இனத்தைப் பற்றியும் ஆராய்வது அவசியமாகின்றது. இராமர் அவதரித்த காலத்திலே திராவிட இனம் இருந்தமைக்கான சான்றுகள் உண்டு. மேலும் பாரதயுத்தத்தின் போது தர்மத்தை நிலைநாட்ட பாண்டவர் தரப்பில் தென் தமிழ்நாட்டில் இருந்த பாண்டியர்கள் யுத்தம் செய்தமைக்கான சான்றாதரங்களும் உள்ளதாக இலக்கிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 


ஈழத் தமிழரும் புலப் பெயர்வும்
இப்பெரும் பழமை வாய்ந்த எம் தமிழ் இனத்திற்கும் தமிழ் மொழிக்கும் என்ன நடந்தது என்று ஒரு சேர ஆராயவேண்டியது எம்கடப்பாடக இருக்கின்றது. பண்பும் பாரம்பரியமும் விழுமிய நெறிகளையும் ஒழுக்கத்தையும் ஒருங்கே படைத்த எம் மொழி மற்றும் பண்பாட்டை பேரினவாதம் என்கின்ற அதிகாரத்துடன் கூடிய அடக்குமுறையும் மேலைத்தேய கலாசாரம் என்கின்ற இராட்சத அரூபகரங்களும் விழுங்கி விட வெறிகொண்டு நிற்கின்றன. ஒருபுறம் இனவெறியாளர்களின் ஆக்கிரமிப்பாலும் மறுபுறம் மேலைத்தேய ஊடுருவலாலும் எம்முடைய இனமும் பண்பாடும் மொழியும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன.


 இந்நிலையை வருமுன் கண்டுதானோ பாரதியும் இப்படிப் பாடினான்:
        "இன்னொரு சொல்லினைக்கேட்டேன்
        இனிது ஏதுசெய்வேன் எனதுயிர் மக்கள்
        கொன்றிடல் போல் ஒரு வார்த்தை – அதைக் 
        கூறத்தகாதவன் கூறினன் கண்டேன்
புத்தம் புதிய கலைகள் – பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
        
மெத்த வளருது மேற்கே அந்த  மேன்மை கலைகள் 
        மெல்லத் தமிழ் இனிச்சாகும் அந்த மேற்கு மொழிகள்
        புவிமிசையோங்கும் என்று எந்தப் பேதை உரைத்தான்
        ஆந்த வசை எனக்கெய்திடராமே சென்றுடுவீர்
        ஏட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும்
        கொணர்ந்து சேர்பீர்"

                        
தமிழ் மொழிக்கும் இனத்திற்க்கும் இத்தகைய சூழ்நிலை ஏற்பட்ட போது கொதித் தெழுந்த பாரதி வீரகர்ச்சனை புரிந்தான். புதுப்புரட்சி செய்து எம் மொழியினையும் இனத்தினையும் கட்டிய தழைகளையெல்லாம் அறுத்தெறிந்து  

"வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர்
வீரம் செறிந்தது தமிழ்நாடு" 

என்பதை உலகிற்கு உணர்த்தினான். எம்முடைய ஈழத் தமிழருக்கும் தற்போது இவ்வாறானதெரு புரட்சிக் கவி தேவை என்பதைவிட அவசியம் என்றே கூறலாம். முப்பது ஆண்டுகால கொடூர யுத்தத்தில் எம் உரிமையை இழந்தோம் உறவுகளைப் பறிகொடுத்தோம். பறிகொடுத்துவிட்டு பரிதவிப்போடு நிற்கின்றோம் இதனால் எம்முறவுகள் புலம்பெயர்ந்து சென்றன. 


புலம் பெயர் ஈழத் தமிழரும் தமிழ் மொழியும்
ஆயினும் அவர்கள் அன்று பயந்து ஓடவில்லை எம் இனத்தைக் காக்கச் சென்றனர். இன்றும் அக்கடமையினை தமிழ் தலைமைகள் செய்கின்றனவோ இல்லையோ புலம்பெயர் தமிழர்கள் செய்கின்றனர். இதற்கு எம்முடைய சுவிஸ் காரை அபிவிருத்தி சபையே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.


எமக்காக அரும்பாடும் புலம்பெயர் தமிழர் மத்தியில் இன்றும் தமிழ் மொழியானது வேர் பரப்பி  மண் பிளந்து ஆழத்தில் இருந்து முளைத்த வித்தினைப் போல் வேரூன்றி நிற்கின்றது. இருப்பினும் அடுத்த சந்ததியினரிடம் எம் மொழி பற்றிய வேட்கையும் எம்முடைய இனத்தின் அடையாளத்தின் மீதான பற்றும் தொனிக்கின்றதா? அது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. இதனால் இன்று அழிந்து வரும் மொழிகளின் பட்டியலில் தமிழ் மொழியும் இடம் பிடித்து விடுமோ எனும் அச்சம் ஏற்படுகிறது. இது மிகவும் வருந்தக்கூடிய சூழ்சிலையாகவும் திகழ்கிறது. ஆகவே நாம் ஒன்றை அவதானத்திற் கொள்ளவேண்டும் தமிழ் மொழியும் பண்பாடும் தழிழ் இனமும் உயிரும் உடலும் போன்றது. இங்கு ஒன்று இல்லை எனின் மற்றயது அர்த்தமற்றது ஆகிவிடுகிறது.


இன்றைய நவ காலனித்துவத்தை தற்கால உலகமயமும் தாராண்மை வாதமும் உரமிட்டு வழக்கின்றன. எனவே அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் அச்சாணியாக மேற்குலகமும் அதன் கலாசாரமும் திகழ்கின்றது. இன்றைய புலம்பெயர் தமிழர்களாயினும் நாட்டிலுள்ள தமிழர்களாயினும் மேற்கைத்தேய பாண்பாட்டுப் பகட்டின் மீது அதிக மோகம் கொண்டே அதன் வழியில் நடக்கின்றனர் என்று நாம் எண்ணினால் அது எம்முடைய மூடத்தனமாகும். உண்மை என்னவெனில் இப் பண்பாட்டுப் படையெடுப்பை அடிப்படையாக கொண்ட செய்திதிட்டங்கள் மேற்குலகவாதிகளாலும் இனவெறியாளர்களாலும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பதனை நாம் உணரவேண்டும்.


அன்று பாரத சுதேச ஆடைகளை அணிந்து கொண்ட மகத்துவமான புரட்சியை புரியச்சொல்லி கூற முன்வரவில்லை. குறைந்த பட்சம் உங்களுடைய சந்ததியினருக்கு தமிழ் மொழியின் சுவையை, அவசியத்தை, இனத்தின் இருப்பிற்கான மொழியின் இன்றியமையாத் தன்மையை உணர வைக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு உங்களுக்கு உண்டு என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும். ஏனெனில் ஒரு இனத்தினுடைய தனித்துவம் அதன் மொழியாகும். அதுவே அதற்குரிய அடையாளமுமாகும் மொழியின்றி இனம் தழைக்காது என்பதை மனதிற் கொள்ளவேண்டும்.


இன்று புலம்பெயர் தமிழர்களின் பெரும்பாலான இளம் சந்ததியினர் எம்மொழியினை கதைக்க கடினப்படுகின்றனர். மேலும் பலர் வெட்கப்படுகின்றனர். இத்தகைய இழிநிலையை வேரோடு களையவேண்டியது முனைப்புடன் செயற்படும் புலம்பெயர் அமைப்பினுடைய தலையாய கடமையாகும். இல்லையெனில் புலம்பெயர் மக்கள் மத்தியில் நிகழ்காலம் முடிய எதிர்காலத்தில் மொழி தெரியாத தமிழர்கள் உருவாவர். ஏற்கனவே கரிபியத் தீவுகளில், ரியூனியன் தீவுகளில், மாலைத் தீவுகளில், மோரீசு மற்றும் பியூஜித் தீவுகளில், மலேசியா, மியான்மார் (ரங்கூன்) இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தமிழர் பண்பாடு பெரும்பான்மைப் பண்பாட்டுடன் கலந்த ஒட்டுக் கலப்பு நிலையில் உள்ளது. அதாவது அபௌதீக மற்றும் புழங்குபொருள் பண்பாட்டுக் கூறுகள் முற்றிலும் அழிந்து விட்டதென்றே கூறலாம். 


எதிர்காலத்தில் புலம்பெயர் ஈழத் தமிழ் இனத்தின் அடையாளம் முற்றிலும் மறையக்கூடிய ஆபத்தும் ஏற்பட்டுவிடலாம். புலம்பெயர் தமிழர்கள் இல்லையெனின்; காலம் காலமாய் எங்களுடைய சிரசில்லாமுண்டங்களையும் சதைப்பிண்டங்களையும் ருசித்து சுவைத்த பேரினவாதிகள்; எம்மீது மேலும் வன்முறைகளை கட்டவிழ்க்க தயங்கமாட்டார்கள். இதன் இறுதி விளைவு ஈழத்தின் ஒட்டுமொத்தத் தமிழினமும் இரண்டாந்தரக் குடிகளாகவே வாழ வேண்டிய இன்னலும் உருவாகலாம்.


எம்முடைய மதிப்பிழந்த மரணமும் சிறைவாழ்வால் பரிதவிக்கும் பாவிகளாய் வாழத்துடிக்கும் நடைப்பிணங்களும் பகலவன் ஒளிராத பாதையில் பரிதவிக்கும் பாவிகளாய் வாழ்வதும் தொடரலாம். வழிகின்ற விழிகளுடன் அவலங்களை அணிந்து கொண்டு வீழ்கின்ற கண்ணீரால் எம் கைவிலங்குகள் உடையுமோ என்ற ஏக்கத்துடன் ஒவ்வொரு நொடிப்பொழுதும் கூண்டில் அடைத்து சிறகொடிக்கப்பட்ட கூண்டுக்கிளியாய் வாழ்பவர் நாளை நரகத்தின் வாசத்துடன் ஆயுளை முடித்துக்கொள்ள நேரிடும். 


    ஆச்சாணியானது தேரிற்கு எவ்வளவு இன்றியமையாததோ அதேபோல் ஒட்டுமொத்த தமிழருக்கும் புலம்பெயர் தமிழர்கள் இன்றியமையாதவர். எனவே புலம்பெயர்ந்த எம் எதிர்கால உறவுகளின் உள்ளத்தில் தமிழ் அன்னையின் மகத்துவம் உணரப்பட்டலே ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தில் வசந்தம் பிறக்கும் என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது.


    தமிழை பண்பாட்டு மற்றும் பயன்பாட்டு மொழியாகவும் துளிர்விடும் நாவினில் எம் தமிழன்னைக்கு சிறப்பிடம் வழங்கி எம் தமிழ் இனத்தையும் தமிழ் மொழியையும் சீராகக் கற்றுணர்ந்து தமிழினத்தின் பாரம்பரிய பெருமைகளை மென்மேலும் மெருகூட்டி உயர்த்த அடுத்துவரும் எதிர்கால சந்ததியினர் முனைப்புடன் செயற்பட வேண்டும்.


    புலம்பெயர் மக்கள் மத்தியில் தமிழ் மொழியின் எதிர்காலம் எவ்வாறிருக்கின்றதோ அதையொட்டியே ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்காலமும் அமையும் புலம்பெயர் தமிழர்கள் தம்முடைய சந்ததியினருக்கு தமிழ் மொழி மற்றும் பண்பாடு ஆகிய தேவாமிர்தத்தை பருகச்செய்ய வேண்டும் தமிழர் உணர்வை வளர்க்கக்கூடிய செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.


    "ஆடுகள் கூடிக்கத்தும் ஆட்டிடையன் வருவான் என்று. உந்தி நிறைய உணவிடுவான். வெயில் மழை கண்டால் மனம் பொறுக்கான். என்று கூடிக்கத்துகின்ற ஆடுகள் பல ஆடுகள் தம் கண்முன்னே இடையனால் பலியிடப்பட்ட பின்பும் இடையன் வருவான் இன்னலில் இருந்து காப்பான் என கடைசி ஆடுவரை காத்திருக்குமாம்" இந்த ஆட்டின் நிலையே இன்று அனைத்துலக தமிழர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ஏமற்றத்தால் ஏமாந்து போகும் நிலையினை ஒழிக்க வேண்டுமென்றால் அனைத்து தமிழ் உள்ளங்களிடத்தும் அன்பும் ஒற்றுமையும் குடிகொள்ளவேண்மும். இதுவே புலம்பெயர் தமிழருக்கும் அதைத்துலகத் தமிழருக்கும் சிறந்த அடித்தளமாய் அமையும்.


        
தமிழர்கள் என்பவர்கள் விடுதலை என்னும் வித்தினை தேடி அலையும் வானம்பாடிகள் என்றும் வானத்தையே அளந்து திரிந்தும் வலிக்காத எம்முறை சிறகுகளுக்கு அன்னியசக்திகள் தடையை ஏற்படுத்தினாலும் அது எமக்கு வலிமையினையே தோற்றுவிக்கும் என்பதை உணரவைக்க வேண்டும். சூரியன் தன்னுடைய நம்பிக்கை என்னும் கிரகணங்களை எண்திசையும் பரப்பி ஒளிவீசுவது போல எம்முடைய அவலங்களைக் களைந்து மீண்டெழுந்து வெஞ் சிறையினை நாம் கடக்க வேண்டும். கிழக்கு சிவக்கும் ஒரு நாள.; அதிகாரத்தின் ஆணிவேரினை அறுத்து எம் இனம் தலைநிமிர்வது என்பது எம்முடைய தமிழ் மொழியின் நிலைத்திருப்பிலேயே தங்கியுள்ளது. தானாய் விடிவெள்ளி தோன்றும் சங்கதிகள் வானத்தில் மட்டும் தான். நிஜத்தில் கிடையாது. எம் இனத்தில் விடிவெள்ளியை உருவாக்கும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்களிடம் உண்டு.


"தமிழுண்டு! தமிழ் மக்களுண்டு! தமிழருக்கு நாளும் செய்வோம் நல்லதொண்டு! தமிழ் என்று தோள்தட்டி ஆடு! தமிழ் இன்பத் தமிழ் வெல்க வெல்க என்று தினம் பாடி ஆடு". "வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்".

                                                                      நன்றி


                                                                                                இங்ஙனம்.
                                                                            சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                        மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு
                                                                                செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                11.08.2016

 

 

03 kadduraipoddi2015 01