நூல்நயம் ( ஆலய வழிபாடு )

நூல்நயம்
ஆலய வழிபாடு

alaya001


ஆலய வழிபாடு எனும் இந்நூல் மூதறிஞர் பண்டிதர் கலாநிதி க. வைதீசுவரக்குருக்கள் அவர்களின் முதலாவது ஆண்டை நினைவு கூருமுகமாக அவருக்குச் சமர்ப்பணமாக அவரால் ஆரம்பிக்கப்பட்டதாகிய காரைநகர் மணிவாசகர் சபையால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் இச்சபையின் முன்னாள் செயலாளர் மா. கனகசபாபதி அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.
சிவப்பேறு பெற்ற குருக்கள் அவர்களின்; ஆக்கமான ஷஆலய வழிபாடு| என்னும் கட்டுரையை முதன்மையாகக் கொண்டு, ஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு, திருமந்திரத்தில் அரசாட்சி, நமது ஆலயங்கள் ஆற்றவேண்டிய பணிகள், ஆலயத் திருத்தொண்டுகள், ஆலய வழிபாட்டு நெறியில் பெருகிவரும் பெண்களின் பங்களிப்பு என ஆறு கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துள்ளது.
ஓவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு துறைசார் அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளின் உட்பொதி என்பது ஆராய்ச்சி பூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் அறிந்தும் உணர்ந்தும் எழுதப்பட்டுள்ளன.
ஷஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு| எனும் கட்டுரை ஆகமநூல்கள் பற்றிய விளக்கங்கள், கிரியைகளும் ஆகமங்களும், செய்யப்படுவனவும் செய்பவரும் செய்விப்பவரும் எவ்வாறு தொடர்புபடுகின்றனர், அவற்றின் விதிகள் விளக்கங்கள், இன்றைய மக்களின் மனதில் தோன்றும் ஐயங்கள் பற்றிய அலசல்கள் என ஒவ்வொரு இந்துவும் அறிந்திருக்கவேண்டிய  அரிய தகவல்களை உள்ளடக்கியிருப்பதுடன் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்களுக்கான விளக்கங்களையும் தன்னகத்தே கொண்டமைந்துள்ளது. ஆலய தர்மகர்த்தாக்களும் அர்ச்சகர்களும் பயன்படுத்தத்தக்க நூலாக இது அமைந்துள்ளது.
ஷதிருமந்திரங் கூறும் அரசாட்சி முறை| அரசியல் பற்றியதா? எனில் ஆன்மீக அரசியல் பற்றியது. கல்வி அறிவு, நன்நெறி, அறத்தின் சிறப்பு, மன்னனின் தகுதி, சமயம் பேணல், திருக்கோயில் பரிபாலனம், ஒழுக்கம் காத்தல் என்று அரசனுக்கும் சமூகத்துக்குமான நல்ல செய்திகளைத் தருகின்றது.
நமது ஆலயங்கள் ஆற்றவேண்டிய பணிகள் எனும் கட்டுரை காலம் அறிந்து எழுதப்பட்டுள்ளது. ஆலயம் ஒரு கிராமத்தின் உயிர் மையம் எனத் தொடங்கும் இக் கட்டுரை ஆலயத்தில் நடைபெற வேண்டியவை, குருவின் தன்மை, ஆலய நிர்வாகியின் தகுதி, கலைகளைப் பேணும் முறை, ஆன்மீக மையங்கள் ஆலயங்கள் என விரிந்து செல்கின்றது.
ஆலயத் திருத்தொண்டுகள் எனும் கட்டுரை திருமுறைகளுடன்  தொடர்புபடுத்தி திருத்தொண்டுகளின் சிறப்பும் அவசியமும் பற்றியும் விரிவாக ஆராய்ந்து அறிவு பகர்கிறது.
ஆலய வழிபாட்டில் பெருகி வரும் பெண்களின் பங்களிப்பு எனும் கட்டுரை பெண் அடியார் வழிபாட்டு மரபின் வரலாறாகத் தொடங்கி ஈழத்தில் வழிபாட்டு மரபில் பெண் ஈடுபாடுகள் பற்றியும் இலங்கை ஆலயங்களின் வழிபாட்டு மரபுகளில் பெண்கள் பெற்றுள்ள உரிமைகள்  பற்றியும் கூறுகின்றமை சிறப்பாகும்.
இந்நூலுக்கு மகுடமாக அமையும் கட்டுரையை முதல் கட்டுரையாக அமைத்துள்ளார்கள். அது சிவப்பேறடைந்த கலாநிதி, பண்டிதர் க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் ஷஆலய வழிபாடு| எனும் கட்டுரையாகும். இத் தலைப்பில் பல கட்டுரைகள் வெளிவந்திருக்கலாம் ஆனால் ஐயா அவர்களின் கட்டுரை சாதாரண குடிமகனுக்கும், சித்தாந்த விhரணையில் ஈடுபடுவோருக்கும், எதற்கும் சமய நெறியில் ஐயம் எழுப்பி அரற்றி அலைவோருக்கும், எப்போதும் சலிப்புடனே இறைவழிபாட்டை நோக்குவோருக்கும், இறைவழிபாட்டால் என்ன பயன் என்று கேட்கும் இன்றைய தலைமுறைக்கும், தற்காலத்தில் ஆலய வழிபாட்டை வெறும் பண்டமாற்றுக் கருவி போல எண்ணுபவருக்கும் பயன்படத்தக்கதாக அமைகிறது.
அட்டையில் ஆலய தர்மகர்த்தாக்களுக்கு எனத் தரப்பட்ட செய்தி இந்நூலின் மகுடத்தில் பதித்த ரத்தினமாக ஒளிர்கிறது. மொத்தத்தில் ஒவ்வொரு ஆலயத்திலும் இருக்கவேண்டிய பொக்கிஷம். இந்நூல் ஒவ்வொரு இந்துவும் வாசிக்க வேண்டிய நூல். இந்நூலைக் காலம் அறிந்து, தேவை அறிந்து தொகுத்தவரும், அதனைக் குருக்கள் ஐயாவின் நினைவாக வெளியிட்ட காரைநகர் மணிவாசகர் சபையாரும்  போற்றத்தக்கவர்கள். வணங்கத்தக்கவர்கள். வளர்க அவர்தம் அறப்பணி.

 

அ. மனோகரன்