கொழும்பு மாநகரில் நடைபெற்ற காரைநகர் மகான் சிவத்திரு. ச.அருணாசலம் அவர்களின் 96ஆவது நினைவு தினமும் நூல் அறிமுகவிழாவும்

Arunasala-CoverST

கொழும்பு மாநகரில் நடைபெற்ற காரைநகர் மகான் சிவத்திரு. ச.அருணாசலம் அவர்களின் 96ஆவது நினைவு தினமும் நூல் அறிமுகவிழாவும் 


கல்வியாளர்களுக்கும், சமூக சேவையாளர்களுக்கும் மிக முன்னோடியான காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் (1864-1920) அவர்களின் சரிதம் அடங்கிய "சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்" என்ற நூல் அறிமுகவிழா 17.01.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கலாபூஷணம் சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அன்றைய தினம் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் அமரத்துவம் அடைந்த 96ஆவது நினைவு தினமும் என்பது சிறப்பானதாகும்.

 


இந்த நூல் வெளியீடு பற்றி வீரகேசரி ஞாயிறு சிறப்பிதழிலில் இடம் பெற்ற சிறப்புக் கட்டுரையை இங்கே தருகின்றோம். 

சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்
நூல் வெளியீட்டு விழா ஒரு கண்ணோட்டம்

                                                                                                                        – ஆ.முருகேசு – 


சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நூலை 2ஆவது பதிப்பாக கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் தலைவர் சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் வெளியிட்டு வைத்தார். 


இந்நூலின் முதற் பிரதியை காரைநகர் சைவ மகா சபையினர் 1971ஆம் ஆண்டு வெளியிட்டு இருந்தனர். இந்த நூல் ஆசிரியர் அல்வாயைச் சேர்ந்த சி.கணபதிப்பிள்ளை ஐயர். இவர் அல்வாய் வாசர் வல்வைச் சிவகுரு வித்தியாசாலையின் முன்னாள் தலைமையாசிரியர் ஆவார். 


ஆறுமுகநாவலருக்கு அடுத்ததாக சைவத்திற்கும் தமிழுக்கும் பல தொண்டுகள் புரிந்து பல சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த பெருமை அருணாசலத்திற்கு உண்டு என்றால் மிகையாகாது. 


அரங்கம் நிறைந்த அறிஞர்களாக தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மங்கள விளக்கை குணரத்தினம் தம்பதியினரும் மற்றும் பல சைவப் பெரியார்களும் ஏற்றிவைத்து விழாவை ஆரம்பித்தனர். 


முதலில் பஞ்சபுராணம் ஓதலினை வை.கணேசலிங்கம், சங்கீத ஆசிரிய ஆலோசகர் மிகவும் பக்தி பூர்வமாக நடத்தினார். பின்பு உயிர்நீத்தவர்களுக்காக மௌன அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. வரவேற்புரையை திருமதி.வடிவழகாம்பாள் விசுவலிங்கம் அன்புநெறி திங்கள் இதழாசிரியர் நடத்தினார். 


தலைமை உரையை கலாபூசணம் சைவப்புலவர் சு.செல்லத்துரை, கொழும்பு திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த பயிற்சி மைய பேராசிரியர் மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் நடத்தினார். 


நூலின் அறிமுகவுரையை பதிப்பாசிரியர் சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம், கனடா சைவ சித்தாந்த மன்றத் தலைவர் சுவாரஷ்யமாக நிகழ்த்தினார். அன்றைய காலத்தில் சைவ மாணவர்கள் தங்கள் உயர் கல்வியைக் கற்பதற்கு மிகவும் கஷ்டங்களை அநுபவித்தபோது அருணாசலம் ஊக்கமும் சகலவிதமான உதவிகளையும் செய்து அம்மாணவர்களை சிறந்த கல்விமான்களாக உருவாக்கினார் என மிகவும் சிறப்பாக விசுவலிங்கம் விளக்கினார். 


நூலாய்வை வவுனியா தமிழ்ச்சங்கத் தலைவரும் காரைநகர் கம்பன் கழகத் தலைவருமான தமிழருவி த.சிவகுமாரன் நிகழ்த்தினார். 17.01.1920 இல் இறைவனடி சேர்ந்த அருணாசலத்தைப் பற்றி 17.01.2016 இல் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு விழா இடம் பெறுவதும் ஒரு வரலாற்றில் போற்றப்படக்கூடிய விடயமாகும் எனவும் இவர் காரைநகருக்கும் காரைநகர் மக்களுக்கும் அக்காலத்திலேயே புகழையும் பெருமையையும் ஈட்டிக் கொடுத்தவர் என தமிழருவி த.சிவகுமாரன் குறிப்பிட்டிருந்தார். 
நூலாய்வின் ஒரு பகுதியை கோப்பாய் ஆசிரிய கலாசாலை உப-அதிபர் திரு.ச.லலீசன், எளிய தமிழில் விளக்கினார். அருணாசலம் கிறிஸ்தவ ஆசிரிய கலாசாலையில் பரீட்சை முடிவுற்றதும் அவர்களின் சட்டதிட்டங்களை மீறி நடு இரவிலேயே வெளியேறி ஒரு புரட்சியை நிகழ்த்தியவர்.


அருள்மொழி அரசி வசந்தா வைத்தியநாதன் உரையாற்றுகையில் ஆறுமுகநாவலர், அருணாசலம், க.இராசரத்தினம்(இந்துபோட்) இவர்கள் மூவரும் யாழ்ப்பாண இந்து மக்களின் மூன்று கண்கள் என்று பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை வர்ணித்ததாகக் கூறினார். அத்துடன் மனத்துணிவுடன் இவர் இக்காரியங்கசை; செய்வதற்கு ஈழத்துச் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் சௌந்தராம்பிகை அம்பாள் சமேத சுந்தரேஸ்வரப் பெருமானின் கருணையே ஆகும் என தனது உரையில் கூறினார். 


இந்நூலின் முதற்பிரதியை எஸ்.வி.முருகேசு, குணரத்தினம் தொழிலதிபர், இ.கணேசமூர்த்தி, திருமதி. இரத்தினேஸ்வரி திருவாதிரை ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பத்திலே தானே வந்து எய்தும் பராபரமே இது தாயுமானவர்களின் கூற்று. இதற்கிணங்க இந்த நூலின் இரண்டாம் பதிப்பை செய்த கனடா சைவசித்தாந்த மன்றத் தலைவர் விசுவலிங்கத்தின் பணிகள் மேலும் தொடர இறைவன் துணைபுரிவாராக.  

Colombo Book Release Virakesari Feb.142016Web

 


விழாவில் எடுக்கப்பட்ட படங்களையும் கீழே காணலாம்