2016ஆம் ஆண்டு காரைநகரின் அபிவிருத்திதிட்டவரைபும், செயற்பாடுகளும் – சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை

SWISS-LOGO

2016ஆம் ஆண்டு காரைநகரின் அபிவிருத்திதிட்டவரைபும், செயற்பாடுகளும்.
 அன்புடையீர் வணக்கம்!


 "பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே" என்ற கூற்றிற்கு இணங்க கடந்த பல வருடங்களாக  எமது தாய் சங்கமான  காரைநகர் அபிவிருத்திச்சபையுடன் இணந்து புலம்பெயர் அமைப்புக்களான  கனடா  காரை கலாச்சாரமன்றம், லண்டன் காரை நலம்புரிச்சங்கம், பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கம்,  சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை, அவுஸ்திரேலியா காரை நலன்புரிச்சங்கம் மற்றும் கிராம நலன்விரும்பிகளும் சேர்ந்து பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துவருவது யாவரும் அறிந்ததே!
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையால்
31.01.2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தாய்ச் சங்கமான காரைநகர் அபிவிருத்திச்சபையை திறம்படச் செயல்படுத்துவதற்கு எமது சபையின் திட்டமிடல் ஓருங்கிணைப்பு உறுப்பினராகிய அறக்கொடை அரசு திருவாளர். சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள்  கடந்த மாதம் காரைநகர் சென்று அங்குள்ள சில அபிவிருத்திப் பணிகளை நேரில் பார்வையிட்டார். அத்துடன் காரைநகர் அபிவிருத்திச்சபை நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்துரையாடி  மார்கழிமாதம் 24.12.2015  வியாழக்கிழமை மாலை 2.00 மணிக்கு காரைநகர் மாணவர் நூலகத்தில் எமது கிராமத்தின் அனைத்துப் பன்னாட்டு   நலன்புரி அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் ஒரு  கலந்துரையாடலை ஒழுங்கு செய்துள்ளார். 

"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்ற மொழிக்கிணங்க எமது கிராமத்தின் 2016ஆம் ஆண்டிற்கான கல்வி,சுகாதாரம், சுற்றுச்சூழல் பொதுவிடயம், கைத்தொழில் எனப்பல விடயங்கள் கலந்துரையாட இருப்பதாலும் ஒவ்வொரு துறைக்குமான சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படும் பட்சத்தில் தங்களுடைய துறைசார் நிபுணத்துவம் ஊரின் வளர்ச்சிக்குப் பயன்படும் என்பதாலும் அனைத்துப் பன்னாட்டு   நலன்புரி அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறைந்தது இரண்டுபேர் வரை  பங்குகொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
1991ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் புலம்பெயர்வு இடம்பெற்றது தற்பொழுது ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலையில் எமது கிராமத்து குடிப்பரம்பலை அதிகரிக்கச் செய்வதற்கும் நேரிய முறையில் காரை மண்ணின் அபிவிருத்தியை மேற்கொள்ளவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது காலத்தின் தேவை.  பூமிப்பந்தில் பரந்து வாழ்கின்ற எமது கிராமத்து உறவுகளின் பங்களிப்பைச்
சிறுதுளி பெருவெள்ளம்போலப் பெற்று 2016ஆம் ஆண்டு எமது காரைத்தாயை ஈழ மண்ணின் முன்னுதாரணமான கிராமமாக மாற்ற அத்திவாரம் இடுவோம். பார்வையாளர்களாயிருந்தது போதும். பங்காளிகளாவோம் வாருங்கள். ஒன்றிணைந்து வாருங்கள்.


நன்றி
'நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்'
இங்ஙனம்,
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                     செயற்குழு உறுப்பினர்கள்,
                              சுவிஸ் வாழ் காரை மக்கள்.

 19.11.2015