அமரர் சிவத்திரு கலாநிதி வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு விழா மலருக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன

அமரர் சிவத்திரு கலாநிதி வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு விழா மலருக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன

 

PHOTOகலாநிதி க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களது 100 ஆவது அகவை வருகின்ற செப்ரெம்பர் 22 நினைவு கூரப்படுவதை முன்னிட்டு அவர்தம் தன்னிகரில்லாப் பணியையும் வாழ்வையும்  பதிவு செய்யும் நூற்றாண்டு விழா மலர் வெளியிடுவதற்காக ஆக்கங்கள் கோரப்படுகின்றன. இம்மலரிற்கு சைவசித்தாந்தம்‚ தேவார திருவாசகம் முதலான திருமுறைகளின் பெருமையைக் கூறும் ஆக்கங்கள்‚ ஈழத்தில் சிவ வழிபாடு தமிழிசை‚ தமிழ்மொழி – வரலாறு – கலை – பண்பாடு முதலான துறைகள் சார்ந்த பிற மலர்களிற் பிரசுரமாகாத தனித்துவமான ஆய்வுக் கட்டுரைகளும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

கட்டுரைகள் அனுப்பும் அறிஞர்கள் கட்டுரைகளுடன் தங்களைப் பற்றிய குறிப்பையும் ‚ புகைப்படம் ஒன்றையும். கலாநிதி. க.வைத்தீசுவரக்குருக்கள்‚ கந்தரோடை‚ சுன்னாகம் என்னும் அஞ்சல் முகவரிக்கு அல்லது baladhuvarahan@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு யூலை 31ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு நூற்றாண்டு விழா மலர்க் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

 

நூற்றாண்டு விழா மலர்க்குழுவினர் சார்பில்

வே.சிவகுருநாதன்        

பா.துவாரகன் 

கட்டுரைகள் அனுப்ப வேண்டிய முகவரி :

KALANITHI.K.VAITHEESWARAKURUKKAL

KANDERODAI,

CHUNNAKAM,

JAFFNA,

SRI LANKA.

      

மின்னஞ்சல் :  baladhuvarahan@gmail.com                    

 

 

கலாநிதி வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு விழா மலருக்கான

ஆக்கங்கள் கோரும் விண்ணப்பம்

……………………………………………………………………………………….

……………………………………………………………………………………….

……………………………………………………………………………………….

 

விநாயகப் பெருமான் திருவருள் துணை நிற்க.

 

பெருந்தகையீர்!

வணக்கம் பல.

1518 ஆம்  ஆண்டு குளக்கோட்டு மன்னனது அழைப்பின் பேரில் திரு உத்தரகோசமங்கை யென்னுந் திருத்தலத்திலிருந்து வந்து  காரைநகர் வியாவில் ஐயனார் கோயிலில் குடியேறிய எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகிய மங்களேசுவரக் குருக்கள்  பரம்பரை வழிவந்த கலாநிதி க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் சைவத்துக்கும் தமிழிற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் ஆற்றிய பணி தமிழ் கூறும் நல்லுலகால் ஈழமணித் திருநாட்டால் நினைவு கூரப்பட வேண்டிய ஒன்று.

 

கலாநிதி வைத்தீசுவரக்குருக்கள் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய பணியை ஆயிரம் தலையுடைய ஆதிசேடனாலும் கூறிவிடமுடியாது என்பார் சபாரத்தினம் ஆசிரியர் அவர்கள். அவரது பதிப்பு முயற்சிகள் பலவற்றுக்குத் தனித்தனி கலாநிதிப் பட்டம் கொடுக்கத் தகும் என்பார் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள். அவர் ஒரு பௌத்தராக இருந்திருந்தால் அவரது மறைவின் போது இந்த நாட்டில் 3 நாள்கள் துக்கம் அனுட்டிக்கப்பட்டிருக்கும்‚ அவரது பெருமையை மாகாணத்தை ஆள்பவர்கள் அறியாமல் உள்ளமை எமது காலத்துயரம் என்பார் வலம்புரி பத்திரிகை ஆசிரியர் விஜயசுந்தரம் அவர்கள். அவருடன் நட்புக்கொண்டவர்கள் அவர்தம் பெருமை அறிந்தவர்கள் பெரும்பேறு பெற்றவர்களே.

 

வரும் செப்ரெம்பர் 22‚ ஐயா அவர்களது 100 ஆவது அகவையை நினைவு கூரும் வேளை அவர் தம் தன்னிகரில்லாப் பணியை‚ வாழ்வை வரும் தமிழ்ச் சந்ததிக்கு ஆவணப்படுத்தி கையளிக்கும் முகமாக முதற்கண் அறிஞர்களிடம் இருந்து கட்டுரைகளைப் பெற்று நூற்றாண்டு விழா மலர் வெளியிட சித்தங் கொண்டோம். கலாநிதி வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு விழா மலர் வியாவில் கணபதீஸ்வரக்குருக்கள் நூலக வெளியீடாக மலர்வதற்கு திருவருள் கை கூடியுள்ளது.

 

வரும் யூலை 31 ஆம் திகதிக்கு (31.07.2015) முன்னதாக கலாநிதி வைத்தீசுவரக்குருக்கள் அவர்களது பணியை எடுத்துக் கூறும் எழுத்தாக்கங்களை உலகெங்கும் பரந்து வாழும் தகைசான்றோரிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.  மேலும் சைவ சித்தாந்தம்தேவார‚ திருவாசகம் முதலான திருமுறைகளின் பெருமையைக் கூறும் ஆக்கங்கள்‚ ஈழத்தில் சிவ வழிபாடு மற்றும் தமிழ் – மொழி – வரலாறு – கலை – பண்பாடு ஆகிய துறைகள் சார்ந்த பிற மலர்களில் பிரசுரமாகாத தனித்துவமான ஆய்வுக் கட்டுரைகளையும் அறிஞர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

கட்டுரைகளை க.வைத்தீசுவரக்குருக்கள்‚ கந்தரோடை‚ சுன்னாகம் என்னும் அஞ்சல் முகவரிக்கு அல்லது baladhuvarahan@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

 

ஐயா அவர்கள் 1940 இல் மணிவாசகர் சபையை ஆரம்பித் போது யோகர் சுவாமிகள் ஐயாவுக்கு நினைவு படுத்திய வேண்டத் தக்க தறிவோய் நீ வேண்ட முழுதுந் தருவோய் நீ என்ற திருவாசக வரிகளே இம் மலரையும் மணங்கமழச் செய்யும்.

காரைநகர் ஈழத்துச்சிதம்பர சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமான் உடனுறை ஆண்டிக்கேணி ஐயனாரும் வியாவில் ஐயனாரதும் திருப்பாதங்களைப் பணிந்து விண்ணப்பிக்கின்றோம்.

 

நூற்றாண்டு விழா மலர்க்குழு சார்பில்

………………………………………………………..                                             ………………………………………………..

வே.சிவகுருநாதன்                                                                             பா.துவாரகன்         

 

Kindly post your articles to the following address:   

KALANITHI.K.VAITHEESWARAKURUKAL

KANDERODAI,

CHUNNAKAM,

JAFFNA,

SRI LANKA.