காரைக் கதம்பம் 2013 – காரை அபிவிருத்திச்சபையின் வாழ்த்துக்கள்

இலண்டன் காரை நலன்புரிச் சங்கம் நடாத்தும் காரைக் கதம்பம் – 2013ற்குக் காரை அபிவிருத்திச் சபையின்   சார்பாக அதன் நிர்வாக சபையின் வாழ்த்துக்களும் வேண்டுகோள்களும்

இலண்டன் காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த கதம்ப நிகழ்ச்சி பெப்ரவரி மாதம் 2ம் திகதி நடைபெறுவதையிட்டு காரை அபிவிருத்திச் சபையின் நிர்வாக சபை தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது. இவ்விழாவிற்குத் திருமதி வீரமங்கையினைப் பிரதம விருந்தினராக அழைத்ததையிட்டும் மகிழ்ச்சி அடைகின்றது. அத்துடன் இதுபோன்ற நிகழ்வுகள் வருடாவருடம் தொடரந்து நடைபெறுவதையிட்டும் பூரிப்படைகின்றது.

06.01.2013 அன்று தெரிவு செய்யப்பட்ட எமது நிர்வாக சபையினை வாழ்த்தி வரவேற்ற. எமது சகோதர சங்கங்களுக்கும் தனி அன்பர்களுக்கும் இத்தால் எமது நன்றியினை அறியத் தருகின்றோம்.

அடுத்ததாகப் புலம் பெயர்ந்துள்ள நம் காரை மக்களுக்குச் சில தாழ்மையான வேண்டுகோள்களை முன்வைக்கின்றோம். இதுவரை தாங்கள் செய்த உதவிகளுக்கும் தான தர்மங்களுக்கும் தலைவணங்குகின்றோம். கடந்த மூன்று சகாப்தங்களாக நமது ஊர்மக்களில் பலர் பிற ஊர்மக்களைப் போன்று பல இன்னல்களை அனுபவித்து வந்துள்ளார்கள். அவர்களில் சிலர் தன்னம்பிக்கையுடனும்  சுயமுயற்சியினாலும் வாழ்க்கையில் முன்னேறியது மட்டுமன்றி தங்களைச் சார்ந்தவர்களுக்கும் தாம் பிறந்த மண்ணிற்கும் தம்மாலியன்றவரை உதவி செய்து வருகின்றார்கள். ஆனால் வேறு சிலரோ  எவ்வளவு முயற்சி செய்தும் முன்னேற வழி தெரியாமல் தவிக்கின்றனர். இவர்களை ஆங்கிலத்தில் கூறுவதாயிருந்தால் ‘Those who can not help themselves’ என்று கூறலாம். இவர்கள் இங்குள்ள வசதி படைத்தவர்கள் மூலமாகவும் புலம் பெயர்ந்த உங்கள் மூலமாகவும் தங்களுக்கு ஒரு விடிவு காலம் வரும் என்று நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்புகளுடனுள்ளார்கள், அவர்களின் நிலை அவர்களால் உருவாக்கப் பட்டதல்ல. சூழ்நிலை காரணமாக அவர்கள் அந்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்களின் தேவைகளை அறிந்து உதவி செய்வதுதான் எமது சங்கங்களின்  தலையாய கடமை என்று தாழ்மையுடன் கூற விரும்புகின்றோம்.

இவ்விடத்தில் வீரத்துறவி விவேகானந்தரினதும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கென்னடியினதும் வார்த்தைகளை நினைவு கூறுவது நல்லது என்று கருதுகின்றேன்.. விவேகானந்தர்  ‘நான்கு தகுதியுள்ள இளைஞர்களைத் தாருங்கள் நவீன இந்தியாவை உருவாக்குவேன்’ என்றார். நான்கு இளைஞர்களல்ல நாற்பது இளைஞர்களை மனம் வைத்தால் நமது சங்கங்கள் மூலமாகவும் தனிப்பட்ட முறையிலும் உருவாக்க முடியும். இதற்காகத்தான் கென்னடியின் வாரத்தைகளையும் நாம் உட்கொள்ள வேண்டும். அதாவது ‘Ask not what the country can do for you, ask what you can do for the country’ இவ்வார்த்தையினை எமது ஊருக்குப்பயன்படுத்தி ‘காரைநகர் உங்களுக்கு என்ன செய்யும் என்று கேட்காதீர்கள், நீங்கள் காரைநகருக்கு என்ன செய்ய முடியும் என்று கேளுங்கள். இந்தக் கேள்விக்கு நீங்கள் வழங்கப்போகும் நல்ல பதிலில் தான் காரைநகரை மீண்டும் ஒரு சிறந்த ஊராக உருவாகமுடியும்.

ஆகவே அன்புள்ளங்களே விவேகானந்தர் விரும்பிய இளைஞர்கள் நம்மிடையே நம் சிறுவர் சிறுமிகளில் உள்ளார்கள். நாம் செய்யப்போகும் உதவிகள் மூலமாக அவர்களை வெளிக்கொணர முடியும். ஆகவே கல்விக்கு முக்கியத்துவம் தந்து இளம் சமுதாயத்தினை ஊக்குவிக்குமாறு வேண்டுகின்றேன். எமது சங்கங்கள் மூலமாக உதவி செய்யாவிட்டாலும் ஒருவர் தான் கற்ற பாடசாலைக்கு நேரடியாக உதவி செய்ய விரும்பினால் அதற்கேற்ற ஒழுங்குகளை நாம் இங்கிருந்து செய்து தருவோம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

காரை நலன்புரிச் சங்கம் கல்விக்கோட்டத்தினூடாக மாணவ மாணவிகளுக்குத் தேவையான சில பதிப்புக்களை  இலவசமாக வழங்குகின்றனர். அதற்குரிய செலவினை நமது சங்கம் ஏற்றுக்கொண்டிருப்பதனை அறிவீர்கள். இதற்காகத்  தொடர்ந்து பணம் கொடுப்பதிலும் பார்க்கத் தேவையான Duplex Printing Machine ஒன்று கல்விக் கோட்டத்திற்கு வழங்கினால் அவர்கள் மூலமாக நம் மாணவர் சமுதாயம் மேன்மேலும் பயனடையும் என்பது நிச்சயம். இதுவிடயமாகக் கல்விக்கோட்ட அதிகாரிகள் இருவருடன் கலந்தாலோசித்த பொழுது அவர்கள் குறிப்பிட்ட Machine ரூபா ஐந்து இலட்சம் மட்டில் முடியுமென்று கூறினார்கள். இந்த உதவியினைத் தனி நபரோ அல்லது சகோதர சங்கங்களுடன் சேர்ந்து உங்கள் சங்கமோ அவசியமெனக் கருதி அன்பளித்தால் மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி முழங்கினான். காரைநகரைப் பொறுத்த வரையில் உணவுப் பஞ்சம் முன்னணியில் இல்லை. ஆனால் கோடைகாலத்தில் நம்மக்கள் எதிர்கொள்ளும்  தண்ணீர்ப் பிரச்சினையோ தாங்கமுடியாததாகவுள்ளது. இதனை நான் நேரில் அனுபவித்தவன் என்ற வகையில் கூறுகின்றேன். மக்களின் தவிப்பினைக் கண்கூடாகச் சென்ற கோடையில் கண்டிருக்கின்றேன்.  இந்நிலையினை ஓரளவு தணிப்பதற்கு இலண்டன் காரை நலன்புரிச் சங்கம் அளப்பரிய பங்களித்துள்ளது என்பதனை அனைவரும் அறிவர். இதற்காகத் திரு நடராஜா அவர்களின் ஈடுபாட்டினையும் வழிநடத்தலையும் ஆயிரம் நாப்படைத்த ஆதிசேஷனாலும் வர்ணிக்க முடியாது. அவர் தண்ணீர் விநியோகப் பொறுப்பினைத் தன்னந்தனியாகத் தன் தோழ்களில் சுமந்து மிகவும் சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடாத்தியுள்ளார். அவரது பணிகளுக்குக் காரை அபிவிருத்திச் சபை மனதார நன்றி தெரிவிப்பதுடன் உலகிலுள்ள நமது அனைத்து மன்றங்களும் நன்றிக்கடன் பட்டுள்ளன என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் விநியோகத்தினைப் பொறுத்த வரையில் திரு. நடராஜா அவர்கள் வகுத்த வழியினைப் பின் பற்றி ஓரளவில் வெளியுதவியின்றி எமது நிர்வாக சபை மேற்கொள்ளும் என்று கருதுகின்றேன்.
அடுத்ததாக சுகாதாரம் சம்பந்தமாக ஆஸ்பத்திரிக்குத் தேவையான வசதிகளை தனித்துவமாகவும் சங்கங்களுடாகவும் பல உதவிகளைச் செய்துள்ளீர்கள். அவற்றின் பயன்களை மக்கள் அனுபவித்து வருகின்றார்கள என்பதை மகிழ்ச்சியுடன தெரிவித்துக் கொள்கின்றோம். தற்சமயம் தாங்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க 15 தகுதியுள்ள மக்களுக்கு cataract operation மற்றும் ஆஸ்பத்திரிக்கு tiles பதிக்கும் வேலைகள் சம்பந்தமாக ஒழுங்குகள் நடைபெறுகின்றன.
இங்குள்ள வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள சிலர் அத்தியாவசியமான உதவிகளைக் கேட்டு வருகின்றார்கள். நாம் பொறுப்பேற்ற பொழுது கஜானாவில் நிதியிருக்கவில்லை. அதன் காரணமாக அவர்களுக்குத் தற்சமயம் உதவி செய்ய முடியாமல் இருப்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளோம். ஊதாரணமாக ஒரு பெண்மணி தனது கணவர்  dialysis treatment  பெறுவதாகவும் அவரைப் பராமதிப்பதற்கு உதவமுடியுமா என்றும் கேட்டிருந்தார். மேற்கூறிய காரணத்தினைச் சொல்லி அவருக்கு உதவி செய்ய முடியாமல் இருப்பதைத் தெரிவித்துள்ளோம். இப்படியான ஜீவன்களுக்கு அன்புள்ளங்கள் தனிப்பட்ட முறையில் உதவ முன்வந்தால் தெரிவிக்கவும். நாமும் எம்மால் இயன்ற ஒத்துழைப்பினை நல்குவோம்.

அடுத்ததாக நூலகம் அமைந்து வருவதை அறிவீர்கள். அதற்கு நிதி பற்றாக்குறை ஏற்படும் நிலை வருவதை உணருகின்றேன். இப்பணியில் நேரடியாக ஈடுபட்டிருக்கும் தங்கள் பொருளாளர் திரு ரவீந்திரன் நடராஜா போன்றவர்கள் மேல் நாடுகளில் சற்று கூடுதலாக முயற்சி செய்து நிதி திரட்டினால் வரவேற்கப்படும். உள் நாட்டிலுள்ள வர்த்தகத் தனவந்தர்களையும் அணுகுவதாகவுள்ளோம் இத்திட்டத்தினை மிகவரைவில் நிறைவேற்ற எம்மால் இயன்ற அளவு ஒத்துழைப்பினை வழங்கவுள்ளோம்..

சுருங்கச் சொல்லின் எமது சகோதர சங்கங்களின் ஆதரவுடன் முக்கியமான இவ்வருடச் செயல் திட்டம் மூன்ற வகையானது:

1.    கல்வி சம்பந்தமாக எமது சக்திக்கேற்ப உதவிகளை வழங்குதல்
2.    தண்ணீர் பிரச்சினையினைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பது
3.    சுகாதாரம் வைத்தியசாலை சம்பந்தமான பணிகளைத் தொடர்ந்து செய்வது
4.    சங்கங்கள் ஊடாக மட்டுமன்றி, தனிப்பட்ட முறையில் ஊருக்கு உதவ முன்வருபவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்

United we stand என்ற வாக்கியத்திற்கிணங்க நாமெல்லோரும் சேர்ந்து எமது சிறிய ஆனால் சிறப்புமிக்க பிரதேசத்தினைக் கட்டியெழுப்புவோம் என்று கூறி எமது நிர்வாக சபைக்கு இச்சந்தர்ப்பத்தினை வழங்கியதற்கு நன்றிகூறி மீண்டும் தங்கள் விழா வெற்றிகரமாக நிறைவேற திண்ணபுரத்தான் முதல் திக்கரையான் வரை வணங்கி வாழ்த்துகின்றோம்.

காரை அபிவிருத்திச் சபையின் நிர்வாக சபை 2013 சார்பாக சிவா தி. மகேசன்