காரைநகரிலே, அதுவும் களபூமியில் இப்படியும் ஒரு நன்நீர் கிணறா?

ஆம் இன்றைய நல்லாட்சிக் காலத்தில் பல நல்ல காரியங்கள் நடைபெறுகின்றன. வருடா வருடம் வானம் பார்த்து ஏமாறும் நம்மக்களுக்கு மன்மத வருடமாகிய இவ்வாண்டில் வருணன் கருணை கொண்டு நெடுமழை பொழிந்தான். அரசாங்கத்தின் 'நூறு நாள்' திட்டத்தின் கீழ் விளானையில் கிணறு வெட்டுவதற்காக எமது பிரதேச செயலரின் ஊடாக நிதி கிடைத்தது.

அதனைக் கொண்டு இங்கிலாந்து வாழ் நமது உறவாகிய தம்பி கந்தையா பரமேஸ்வரன் (இராசன்) அவர்கள் நன்கொடை செய்த ஒரு பரப்புக் காணியில் கிணறு தோண்டத் தொடங்கினோம். தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் 13 அடி வரையில் சென்றதுமே ஆச்சரியப்படுமளவிற்கு ஆறு அடி ஆழத்திற்கு மேல் நீர் பொங்கியது மட்டுமல்ல அந்நீரும் அமிர்தம் போன்று சுத்தமான, அதி சிறந்த நன்நீராக இருந்தது. கிணற்றுக் கட்டிட வேலை இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை. இருந்தும் விளானை மக்கள் ஆனந்தம் பொங்க, அந்நீரிலேயே பொங்கல் செய்து படைத்து வந்தோர் அனைவருக்கும் சர்க்கரைச் சாதம் வழங்கிக் கொண்டாடினார்கள். நான் இங்கு கடந்த சில வருடங்கள் வாழ்ந்தாலும் போத்தல் தண்ணீரைத் தவிர வேறொரு தண்ணீரும் அருந்தவில்லை. ஆனால் இன்றோ காரை மாதாவின் நிலத்திலிருந்து பெற்ற தண்ணீரை அருந்தும் பொழுது கிடைத்த இன்பத்திற்கு நிகரேதுமில்லையெனலாம். இதற்கு அத்தாட்சியாக வெளியூரிலிருந்து குடிநீர் கொண்டுவரும் ஒரு பௌசர் சாரதியும் இந்நீரை அருந்தியதுடன் இது வெளியூர் குடிநீரிலும் பார்க்க மிகவும் சுவையாகவுள்ளது என்றும் கூறினார் ( நம்பினால் நம்புங்கள் –  தண்ணீருக்கும் சுவையுள்ளது.) இதுபோன்று நல்ல நிலங்களைத் தேடியெடுத்து இன்னும் பல கிணறுகள் தோண்டினால் நமது குடிநீர் பற்றாக்குறையினை ஓரளவு குறைக்கலாம்.

ஆனாலும் இதுபோன்ற நன்நீர் கிணறுகளுக்கு மோட்டார் போட்டு இறைக்காமல் நம்முன்னோர் காட்டிய வழியில் வாளியினால் நீரை அள்ளிப் பாவித்தோமேயானால் வருடத்தில் பல மாதங்களுக்கு நம் நீரே நமது அடிப்படைத் தேவையினைப் பூர்த்தி செய்யும் என்ற நிம்மதியுடன் வாழலாம். புல இலட்சங்கள் செலவழித்து வெளியூரிலிருந்து குடிநீரினைக் கொண்டு வரும் அதே வேளையில் சில ஆயிரங்கள் செலவழித்து பீப்பா வண்டிகளை மக்களுக்கு வழங்கினால் பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.

பொங்கலை உண்டு நன்நீரை அருந்தி ஏப்பம் விடும் இதே வேளையில் காணி நிலம் வழங்கிய தம்பி இராசனுக்கும் (அவரது தாய் தந்தை உட்பட) அரசாங்க நிதியினை அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பகிர்ந்து வழங்கும் பிரதேச செயலருக்கும் மனம் கனிந்ததும் வயிறு நிறைந்ததுமான நன்றியினை விளானை மக்கள் சார்பாகத் தெரிவிக்கின்றேன்.

எமது ஊரிலிருந்து எமதூரான் 

சிவா தி மகேசன். 

பொங்கல் நிகழ்வின் சிலவற்றினைக் கீழே பார்க்கவும்: 

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18