காரை கல்வி வரலாற்றில் திறக்கப்படும் புதிய அத்தியாயம் மாணவர் நூலகத் திட்டம்

காரை கல்வி வரலாற்றில் திறக்கப்படும் புதிய அத்தியாயம் மாணவர் நூலகத் திட்டம்

ஓர் ஊரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான காரணிகளில் முதன்மையானதும், அடிப்படையானதுமாக விளங்குவது கல்வியே என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.  காரைநகர் என்கின்ற புகழ்பூத்த கிராமமானது உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்று விளங்குவதற்கு இங்கு வாழ்ந்து கல்வியால் உயர்ந்து சாதனை படைத்த பல அறிஞர்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.


 

காரைநகரை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஊர்ப்பற்றாளர்கள் காரை மக்கள் அறிவுச்சாகரத்தையும் தகவல் வளத்தையும் பெற்றுக்கொள்ளும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டுதல் அவசியமாகும்.  இத்தகைய ஆர்வமும் ஈடுபாடும் மிக்க கல்வியாளர்கள் பலருடைய எண்ணக் கருவானது தரமான நூலகமாக உயிர்ப்புப் பெறுகின்ற ஒரு முக்கியமான சமூகப் பணியானது காரைநகர் மக்கள் ஒவ்வொருவரையும் பூரிப்படைய வைக்கும் என்பதில் எவ்வித ஜயமுமில்லை.

பாடசாலைக் கல்வியினால் மட்டும் ஒருவனால் வல்லவனாக முடிவதில்லை. “கல்வி கரையில கற்பவர் நாள் சில||, “வாசிப்பு மனிதனை ப+ரணத்துவமடையச் செய்கின்றது” போன்ற ஞானிகளின் வாக்குக்களிற்கேற்ப எமது உறவுகள் பயனடையும் வகையில் கல்வியை தொடர ஊக்குவித்து வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவல்ல மிகச்சிறந்த சாதனமாக நூலகங்கள் விளங்குவனவாகும். பாடசாலை நூலகங்கள் கல்வித் திணைக்கள அதிகாரிகளின் திட்டத்திற்கேற்ப மட்டுப்படுத்தப்பட்ட நூல்களை மட்டுமே கொண்டுள்ளவையாகும்.  மாணவர்கள் தமது பாடநூல்களுடன் அவற்றிற்கு துணையான பிற நூல்களையும் கற்று பரந்துபட்ட அறிவினைப் பெற்றுக்கொண்டு கல்வியின் உண்மைப் பயனைப் பெறுவதற்கு நூலகங்கள் பெரிதும் உதவக் கூடியனவாகும்.  மேலைத்தேச நாடுகளிலுள்ள மக்கள் இதனை நன்கு உணர்ந்துகொண்டதனாலேயே ஒவ்வொரு ஊர்களிலும் நகரங்களிலும்  நூலகங்களை நிறுவி அவற்றின் மூலமாக அளவிடற்கரிய  பயனைப்பெற்று வருகின்றனர்.

இன்று இலங்கையில் பொது நூலகங்கள் நகரங்களில் மட்டும் நிறுவப்பட்டுவந்த நிலை மாற்றமடைந்து கிராமங்களிலும் நிறுவப்பட்டு வருமளவிற்கு மக்கள் சிந்தனை வலுப்பெற்று வருவதுடன் பொது நூலகங்களை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்கவும் ஊக்குவிக்கவும் நூலகவாரம் போன்ற பல விழிப்புணர்வுச் செயற்பாடுகள் கிராம மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய பின்னணியில்  புலம்பெயர்ந்த காரை மக்களுடைய அதிக நிதிப் பங்களிப்புடன் காரைநகர் மக்களின் பங்களிப்பும் இணைந்து ஆரம்பிக்கப்படவுள்ள மாணவர் நூலகத்திற்கான திட்டப்பணிகளை காரை அபிவிருத்திச் சபை முன்னெடுத்து வருகின்றது. இத்திட்டத்தின் இணைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள இளைப்பாறிய உதவி வைத்திய அதிகாரி திரு. நடராசா அவர்கள் மிகுந்த முனைப்போடு திட்டப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

காரைநகர் மேற்கு பிரதான வீதியும் இடைப்பிட்டி வீதியும் ஒன்றுசேரும் இடத்தின் மூலைப்பகுதியில் அமைந்துள்ள 06 பரப்புக் காணி புலம்பெயர் அன்பர்கள் சிலரின் நிதிப்பங்களிப்புடன் கொள்முதல் செய்யப்பட்டு சமூகசேவைத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பான காரை அபிவிருத்திச் சபையின் பெயரில் எழுதப்பட்டுள்ளது.  இக்காணியின் பள்ளப்பகுதிகள் யாவும் மணல்கொட்டப்பட்டு நிரவி செப்பனிடப்பட்டுள்ளதுடன் பாதுகாப்புச் சுற்றுமதில்களும்; நான்கு பக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.

சென்ற 04-06-2011 இல் நூலகக் கட்டிடத்திற்கான அடிக்கல்லினை உ.அ.அதிபர் திரு.இ.த.ஜெயசீலன் நாட்டி வைத்த வைபவத்தில் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தமை இத்திட்டத்திற்கான ஆதரவின் வெளிப்பாடாக அமைந்திருந்தது.

90×36 சதுர அடி பரப்பு விஸ்தீரணத்தையுடைய இந்நூலகக் கட்டிடத்தின் நிர்மாணப்பணிகள் மிகவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருட காலத்திற்குள் அதனை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.ஆரம்ப நிர்மாணப் பணிகளிற்கு தேவையான ஒருபகுதி  கட்டிடப் பொருட்கள் தற்போது வவுனியாவிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்கான தமது முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் லண்டன், கனடா, பிரான்ஸ், சுவிற்சலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலுள்ள காரை அமைப்புக்கள் தெரிவித்துள்ள நிலையில் கனடா-காரை கலாச்சார மன்றம் லண்டன்-காரை நலன்புரிச் சங்கம் ஆகிய இரு அமைப்புக்களும் உப-குழுக்களை அமைத்து நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.  ஐம்பதாயிரம் டொலர்கள் என்ற குறிக்கோளை எட்டும் முயற்சியில் இத்தொகையின் அரைப்பகுதியினை பல காரை புலம்பெயர் அன்பர்கள் இவ்விரு அமைப்புக்கள் ஊடாக வழங்கியுள்ளமை மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவுள்ளதுடன் தொடர்ந்தும் பல அன்பர்கள் மனமுவந்து தமது பங்களிப்புக்களைச் செய்துவருவது ஊக்கமளிப்பதாகவுள்ளது.

மாணவர் நூலகத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

1. ஆரம்ப பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரையான அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களிற்கும் பயன்படக்கூடிய நூல்களையும் கணினி, போன்ற நவீன கற்றல் சாதனங்களையும் உள்ளடக்கும் வகையில் முதற்கட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.;

2. படிப்படியாக அனைத்து பொதுமக்களும் பயன்படுத்தக்கூடிய முறையில் இலக்கணம், இலக்கியம், சமயம், வரலாறு உள்ளிட்ட பல்துறை சார்ந்த அனைத்து வகையான நூல்களையும் உள்ளடக்கி படிப்படியாக  விஸ்தரிக்கப்படும்.

3. காரைநகரின் வரலாறு, இங்கு வாழ்ந்த பெரியார்கள், ஆலயங்கள், பாடசாலைகள் ஆகியவற்றின் வரலாறு என அனைத்து வரலாற்று ஆவணங்களையும் சேகரித்து வைப்பதன் மூலம் வரலாற்று ஆவணக் காப்பகமாகவும் நூல்நிலையம் செயற்பட வழியேற்படுத்தப்படும்.

4. காரை அபிவிருத்திச் சபையே இந்நூலகத்தினை நிர்வகிக்கும் பொறுப்பினை மேற்கொள்ளவுள்ளது என்பதுடன் இச்சபைக்கான பிரத்தியேக காரியாலயம் ஒன்றும் இந்நூலகத்துடன் இணைந்து அமைக்கப்படவுள்ளது.

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் பிறந்த மண்ணை மறவாது அதன் வளர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும் மிக்க காரை மாதா பெற்றெடுத்த அன்பு நெஞ்சங்களே!  சமூகப்பணிகளில் மிகவும் முக்கியமான பணியாகிய நூலக சேவையினை உங்கள் உறவுகள் பெற்றுக்கொண்டு மண்ணின் வளத்தைப் பெருக்கக்கூடிய வரலாற்றுப் பணி ஒன்று நிறைவேற உங்களது வசதிக்கேற்ப பெரிய அல்லது சிறிய அளவிலான நிதிப்பங்களிப்பினை வழங்கி உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

நூலக அமைப்பு உப-குழு

கனடா-காரை கலாச்சார மன்றம்