மார்கழி! மாதங்களில் நான் மார்கழி என்றான் பகவத்கீதையில் என் கண்ணன். ஏனெனில் இவன் தான் எனக்கு இஸ்ட தெய்வம். அதே மார்கழி தான் ஆருத்ரா தரிசனமும். ஆருத்ரா என்பது திருவாதிரையைக் குறிக்கும். உலக இயக்கத்துக்குக் காரணமான ஈஸ்வரனின் உன்னத நடனத் திருக்கோலத்தைச் சிறப்பிக்கும் திருநாள்தான் திருவாதிரை.

Nadesar

மார்கழி! மாதங்களில் நான் மார்கழி என்றான் பகவத்கீதையில் என் கண்ணன். ஏனெனில் இவன் தான் எனக்கு இஸ்ட தெய்வம். அதே மார்கழி தான் ஆருத்ரா தரிசனமும். ஆருத்ரா என்பது திருவாதிரையைக் குறிக்கும். உலக இயக்கத்துக்குக் காரணமான ஈஸ்வரனின் உன்னத நடனத் திருக்கோலத்தைச் சிறப்பிக்கும் திருநாள்தான் திருவாதிரை. 

அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாக்ரபாதர் பதஞ்சலி முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம். தில்லை வந்து நெஞ்சுருகப் பாடி திருவாசகத்தேனைப் பொழிந்த மாணிக்க வாசகர் நடராஜரிடமே ஜ்யோதிப் பொருளாய் மறைந்த தினமும் திருவாதிரை திருநாளே. 

இந்த நாளில்; ஸ்ரீ நடராஜரைத் தரிசித்க வழிபட்டு வர நம் இன்னல்கள் யாவும் அகன்று வாழ்க்கை இனிமையாகும். 

மாணிக்க வாசகர் திருவண்ணாமலைக்கு தரிசனம் செய்யச் சென்றார். திருவெம்பாவை என்ற 20 பாட்டுக்கள் உதிர்ந்தன. இதனை விடியற்காலையில் நேம நியமங்களுடன் ஓதுவது பாடிக்களிப்புறுவது வழக்கம். 

நாமெல்லாம் சீவன். சிவனே பரமாத்மா. சீவனுக்கு ஆதாரம் சிவன். நாம் பசு. நமக்கெல்லாம் பதி சிவன். 

விடியற்காலையில் துயில் நீக்கி நன்னீராட்டி தூயமனத்துடன் மற்றவர்களை தூங்காதே எழுந்திரு என அறை கூவி எழுப்பி ஆண்டவனது புகழ்பாட அழைத்துக் கூடிப் பாடி நெகிழும் நெறி தான் திருவெம்பாவை. 

திருவெம்பாவை திருவண்ணாமலையில் பாடப்பட்டது என்றாலும் சிவனடியார்களுக்குக் கோயில் என்றால் சிதம்பரம். அதே போல் கனடாவிலும் கோயில் என்றவுடன் எமக்கெல்லாம் பெரியகோயில் என்று அழைக்கப்படும் றிச்மண்ட்கில் தான் நினைவுக்கு வருகிறது. சிதம்பரத்தில் மணிவாசகப்பெருந்தகை கண்ட நடனத்தை அந்தத் தாண்டவத்தை பாதத்தை தனது 14வது திருவெம்பாவையில் பாடி மகிழ்கிறார்.   

காதர் குழையாட பைம்பூன் கனலாட
கோதை குழலாட வண்டின் குழாமாட
சீதப்புனலாட சிற்றம்பலம் பாடி
வேதப்பொருள் பாடி அப்பொருளாமாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றை தார்பாடி 
ஆதிதிறம் பாடி அந்தமாமாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத்திறம்பாடி ஆடேலோர் எம் பாவாய்.

கடைசி 20வது திருவெம்பாவையில் திரும்பத் திரும்ப ஆண்டவனது பாதமலர் செந்தளிர் பொற்பாதம் பூங்கழல் இணைஅடி பொன்மலர் புண்டரீகம் என்று பாதங்களில் மார்கழி நீராடிப் போற்றுகிறார். 

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்.
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோ ரெம்பாவாய்.

ஓவ்வொரு அடியிலும் ஆண்டவனது அடிகளைப் பணிந்து போற்றி சரணாகதி தத்துவத்தை அறிந்து புரிந்து உணர்ந்து அருளுக அருளுக என விழைகிறார் திருமாணிக்கவாசகர். அவருக்காகவா பாடினார். சிவனார் திருவண்ணாமலையில் அவரிடம் உந்தி உட்கொண்டு நாம் எல்லாம் உய்ய வேண்டும் என்று தானே பாவை பாடினார். 

பதஞ்சலியும் வியாக்ரபாதரும் மட்டுமா ஆனந்தத் தாண்டவம் பார்த்தார்கள். அவர்களுக்கு மட்டுமா ஆடினான். குகை நமசிவாயருக்கும் அல்லவா ஆடினான். 

'அம்பலவா! இன்னொருக்கால் ஆடினால் ஆகாதோ?
உம்பரெல்லாம் கண்டது உனக்கு ஒப்பாமோ? சம்புவே!
வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புலிக்கும் தித்தியென
ஏற்றுப் பதஞ்சலிக்குமே…..'

அந்த ஆடல் வல்ல அம்பலவாணணின் ஆனந்த தாண்டவத்தை நாமும் இன்று பார்த்து மெய்சிலிர்த்து கண்ணீர் மல்கி களிப்புடன்  தரிசித்து 'களி' உண்டு ஆனந்தப் பரவசம் எய்தி!

ஆருத்ரா தரிசனத்தைப் போல்…..!!! அந்த அற்புதத்தை ஆனந்தத்தை அதிசயத்தை அபிஸேகத்தை …. பால் அபிஸேகமோ….. தயிர் அபிஸேகமோ…. நெய் அபிஸேகமோ……. சந்தன அபிஸேகமோ….குங்கும அபிஸேகமோ…. பன்னீர் அபிஸேகமோ…….. தேன் அபிஸேகமோ……..பஞ்சாமிர்த அபிஸேகமோ……..குடம் குடமாக……..தாரை தாரையாக….வாழ்க்கையின் இனிப்பு வேர்வைத் துளிகளின் உப்பில் இருக்கிறது என்பது போல……….தீஸ்தருக்கு இந்த உஸ்ஸிக் குளிரிலும் வியர்;த்து…

ஏனெனில் சிவன் அபிஸேகப்பிரியர். உலகிலேயே நடராஜர் அபிஸேகம் போல் எங்கும் அபிஸேகங்கள் நடப்பதில்லை. 

சுக்ல யஜுர் வேதத்தில்
'ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூரணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே'

'அதுவும் பூர்ணம்; இதுவும் பூர்ணம்; அந்த பூர்ணத்தில் இருந்தே இந்த பூர்ணம் தோன்றி உள்ளது. பூர்ணத்தில் இருந்து பூர்ணத்தை எடுத்த நிலையிலும் பூர்ணம் அப்படியே இருக்கிறது' என்று சொல்லியிருப்பதைப்போல! 

ஆனந்த மயமாகவும் ஆனந்த சொரூபியாகவும் உள்ள நடராஜப் பெருமானிடம் இருந்து நாம் ஆனந்தத்தைக் கேட்டுப் பெற்றாலும் கூட அவரிடம் உள்ள ஆனந்தம் கடுகளவும் குறையப் போவதில்லை.

பக்தியில் சிறந்த நிலை சரணாகதி. 'எல்லாம் அவன் செயல்' என்று முழுக்க முழுக்க தன்னை அவனிடத்தில் ஒப்படைப்பதே சரணாகதி தத்துவம். 
இப்படியான பக்குவநிலை வாய்க்க இறைவனுக்கான வழிபாடுகளும் பணிவிடைகளும் உதவி செய்யும். 

அன்னையாய் குழந்தையாய் காதலனாய் தோழனாய் இறைவனைப் பாடி உருகிய ஆழ்வார்களும் அடியார்களும் அதன் மூலம் இறைவனை நம்மில் ஒருவனாகக் கருதி வழிபடும் நுணுக்கத்தை அழகாய்ச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் காலை எழுந்தது முதல் இரவு உறங்குவது வரையில் நமக்கு நாம் செய்து கொள்ளும் அன்றாடச் செயல்கள் அனைத்தையும் அவருக்கும் செய்து அழகு பார்த்து ஆனந்திப்பது ஒரு சுகானுபவம்.  

இறைவனின் திருநடனத்தை நாவுக்கரசர் போற்றுவதைப் பாருங்கள். 

சுற்றிப்பறக்கும் சடைமுடி அதில் பதிந்து இருக்கும் சுட்டி
திலகம் தவழும் நெற்றி வில்லைப் போல வளைந்த புருவம்
எடுப்பான மூக்கு ஆனந்தம் தவழும் அமைதியான புன்னகை கூடிய திருமுகம் மடிப்புக்களுடன் கூடிய கழுத்து திரண்ட தோள்கள் எடுப்பான மார்பு வளைந்த இடுப்பு தூக்கிய திருவடி அகந்தையை அடக்கி அழுத்தும் மற்றொரு திருவடி தீமைகளைப் பொசுக்கும் தீ அஞ்சேல் என முழுங்கும் உடுக்கை எனக் காட்சி தரும் நடராஜப் பெருமானை திருவாதிரையன்று தரிசித்தோர் மனம் அமைதி பெறும்.

இந்த நடராஜரின் திருநடனத்தை காண வாருங்கள் என ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் அழைக்கிறார்……….

கூற்றிருக்கும் மடலாழிக் குரிசின் முதலோர்
இறைஞ்சக் கொழுந்தேன் பில்கி
ஊற்றிருக்கும் தில்லைவனத் தசும்பிருக்கும்……………

நாம் இருக்கும் இடத்தில் கனடாவில் எம்மை எல்லாம் ஆட்டுவிப்பவன் ஆடினான்……….நாம் அவன் பெயர் சொல்லி புகழ் சொல்லி மலர் தூவி…………
காரை கனடா வாழ் மக்கள் நாம் அவனை அபிஸேகித்தோம் மலர்களால் அழகு படுத்தினோம் பண் இசையால் பரவசப்படுத்தினோhம் நாதஸ்வரம் மேளம் என இறைவா! கச்சி ஏகம்பனே! கச்சி ஏகம்பனே! கச்சி ஏகம்பனே! காரை மக்களுக்கு இது நீ இட்ட கட்டளை! எல்லோர் செவிகளிலும் இது ஏன் கேட்கவில்லை? பிறவிப் பிணியா! அப்படி என்றால் நீ பெரு மருந்தல்லவா! இது தெரியாமலா? இந்த உண்மை புரியாமலா?  இந்த மாயை விலகட்டும்! மூடிய இருள் அகலட்டும்! கச்சி ஏகம்பனே! ஏகம்பனே! 2015ல் உன் சந்நிதியில் ஓர் தாய் பிள்ளையாய்! தொப்புள் கொடியாக! இறைவா! சிதம்பரேசா! சிற்றபேசா! நீ ஆட்டுவிக்கிறாய் நாம் ஆடுகின்றோம். அந்த ஆட்டத்தில் எம் அல்லல்கள் எல்லாம் ஓடட்டும். ஓர்; ஊராய் ஒற்றுமையாய் உன்னைத் தாலாட்ட வரம் தா! வரம் தா! வரம் தா! வேண்டாம் எமக்கு வரட்டுக் கௌரவம்! நாதா ஈஸா தேவா ஸ்ரீ நடராஜப் பெருமானே!

Written By : Ranjson Kanapathippillai (Realtor)