வவுனியா ஸ்ரீ சைவபிரகாச மகளிர் பாடசரலையில் பதினொராம் ஆண்டு கல்வி கற்கும் மாணவியும், காரைநகர் மணற்பிட்டியைச் சேர்ந்து திரு, திருமதி கிருஷ்ணமூர்த்தி, தனலட்சுமி தம்பதிகளின் புதல்வி செல்வி அபிராமி அவர்கள் இலங்கை லயன்ஸ் கழகத்தினால் நடாத்தப்பட்ட முப்பதாவது வருடாந்த கட்டுரைப் போட்டியில் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தினால் ஒருவருக்கு அவர் குடும்பத்திற்கு நாட்டிற்கு ஏற்படும் பாரிய பாதிப்புக்கள். என்ற தலைபில் கட்டுரை எழுதி போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்றமைக்கான பரிசளிப்பு நிகழ்வின்  நிழற்படத் தொகுப்பு.

போதைப்பொருள் துஷ்பிரயோகத்தினால் ஒருவருக்கு அவர்

குடும்பத்திற்கு நாட்டிற்கு ஏற்படும் பாரிய பாதிப்புக்கள்.

போதைப்பொருள் பாவனை என்பது அவற்றை தினமும் பயன்படுத்தும் போது அவற்றிற்கு அடிமையாகும் நிலையினை குறிப்பதாகும். நாளடைவில் இப் பழக்கத்திற்கு அடிமையாகும் போது அவை இன்றி வாழமுடியாத நிலையை உருவாக்கும். இன்று வளர்ந்து வரும் உலகில் பல்வேறுபட்ட பிரச்சினைகளில்  மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம் பெறுகின்றது. இதில் குறிப்பாக படிக்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் பிரச்சினை பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. இதனால் ஒரு சமூகம் மொத்தமாக இழந்து போகக்கூடிய நிலைமை உருவாகின்றது.

போதைப்பொருள் மூலம் இளவயதில் அதன் தாக்கம் விளைவுகள் பற்றி புரிந்து கொள்ள முடியாமல் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகின்றார்கள். எமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் மிகப்பெரிய சவாலாகவும் ஒரு சமூகம் மொத்தமாக இழந்து போகக்கூடிய நிலைமையையும் ஏற்படுத்துகின்றன. திரைப்படங்களில் மது பாவனையை மேற்கொள்ளுவது போல் சித்தரிக்கின்ற காட்சிகள் மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று தாமும் அதேபோல் போதைப் பாவனையில் ஈடுபடுகின்றார்கள். போதைப்பொருள் என்ற வகைக்குள் அடங்குவன மதுபான வகைகள் (சாராயம், விஸ்கி, கள், வைன்), புகையிலை, கஞ்சா, அபின், சிகரட் போன்றவற்றை குறிப்பிடலாம். பஞ்சமா பாதகங்களுள் ஒன்றாக மதுவினை முன்னோர்கள் குறிபிட்டுள்ளனர்.

மாணவர்கள் இலகுவாக குறைந்த விலையில் கிடைக்கும் ஆபத்தான போதைப்பொருட்களை சிறு வயதில் நட்புவட்டாரத்தின் மூலம் பழகி பின்பு அதற்கு நிரந்தர அடிமையாகின்றார்கள். சமூக வறுமையுடன் கூடிய வாழ்க்கையை மறக்க குடி ஒரு தீர்வாக கையாளப்படுகின்றது. மது நாடு, சமூகம், குடும்பம் போன்றவற்றிற்கு பிரச்சினைக்கு வடிகாலாகின்றது. போதைப்பாவனை நீடித்தால் மாணவர்களின் கல்வி வாழ்க்கை மட்டுமன்றி எதிர்கால வாழ்கை மட்டுமல்லாமல் குடும்ப சூழலையும் சீர்கழிக்கும் சக்தி வாய்ந்த ஆபாத்தாக விளங்குகிறது. போதைப் பாவனையால் உடல் மட்டுமல்ல மனமும் பாதிக்கப்படுகின்றது சுயமரியாதை, சுயமதிப்பு உள்ள மனிதனாக வாழாமல் போகின்றார்கள். இது பயன்படுத்துபவர்களை மட்டுமல்ல அவர்களை சார்நத குடும்பத்தையும் பாதிக்கின்றது. இறுதியில் மது அருந்துபவர்களை மரணத்தின் விளிம்பிற்கே கொண்டு செல்கின்றது.

இளம் சமுதாயம் என்பது எதிர்கால சந்ததியினரைக் குறிக்கின்றது இப் பிரிவுக்குள் பள்ளி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், உயர்கல்வி நிறுவனங்களில் கற்கையினை மேற்கொள்வோர், பகுதி நேர வேலைகளிலும், அல்லது முழு நேர வேலைகளில் ஈடுபடும் பதினெட்டு வயதிற்கு குறைந்தவர்கள் உட்பட பதினெட்டு வயதிலிருந்து முப்பத்தைந்து வயதுப் பிரிவினர்களை குறிப்பிடலாம். நாட்டைக் கட்டியெழுப்பும் மிக முக்கிய பங்களிப்பு இன்றைய இளம் தலைமுறைக்கே உள்ள மிக முக்கிய கடமையாகும். அந்தவகையில் இன்றைய தலைமுறையினர் போதைப்பொருட்களானவை பெரும் அச்சுறுத்தலாக இருப்பதுடன் அவற்றினால் ஏற்படும் விளைவுகள் சமூக கட்டமைப்பை சீர்குலைப்பதிலும் முக்கிய பங்குவகித்து வருகின்றது. இளைஞர்களே சமூகத்தின் ஏதிர் காலத்தினை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதனால் போதைப்பொருள் பாவனையை வெற்றி கொள்வதில் அவர்களுடைய பங்களிப்பு இன்றியமையதாக உள்ளது.

இன்றைய இளம் தலைமுறைபோதைப்பொருள் பயன்படுத்துவதன்      அவசியம் என்ன? அல்லது காரணம் என்ன? என்று நோக்குவோமேயானால் பொழுது போக்கிற்காகவும், நண்பர்களுடன் சேர்ந்து சிறிது நேரம் கிடைக்கும் அற்ப சந்தோசத்திற்காகவும், நாகரீகமோகத்தாலும், சமூக ரீதியாக தங்களுடைய செல்வச் செழிப்பை அந்தஸ்தை காட்டிக்கொள்வதற்காகவும் குடும்ப சூழ்நிலை, வறுமைவற்புறுத்தல், சமூதாய பிரச்சினைகள், போர் இடம்பெயர்வு—–), போட்டிச்சூழலை எதிர்கொள்வதில் உள்ள பயம், தகாத நட்புகள், அதிக பணப்புழக்கம், காதல் தோல்வி, மற்றும் கவனிப்பாரற்றநிலை ஆகியவையே இளம் பருவத்தினரை போதைப் பொருட்களை நோக்கி இழுத்துச்செல்கின்றன.

தற்போது இளம் தலைமுறையாகக் கருதப்படுகின்றது மணவர்கள்  போதைப்பாவனைக்கு அடிமையாக மாறி வருவது பேசுபொருளாக மாறியுள்ளது மாணவர்கள் போதைவஸ்துக்களுடன் கைது செய்யப்படுவதும் போதைப் பொருட்களை பயன்படுத்திவிட்டு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவதும் பத்திரிகைகளில் அன்றாட செய்திகளாக மாறிவிட்டன.

தொட்டிற் பழக்கம் சுடுகாடு வரை”  என்ற பழமொழியும் ஜந்தில் வளையாதது ஜம்பதில் வளையுமா? ”  இப் பழமொழிகள் சிறந்த எடுத்துக்காட்டாகும். அதாவது ஒருவரின் சிறுவயதில் பழகி வரும் பழக்கத்தினை மாற்றுவது என்பது கடினமான செயல்களாகும் அதாவது இதை பற்றி பெருந்தகையுடன் வள்ளுவர் கூறுகின்றார்    

                               “களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

                                குளித்தானைத் தீத்துரீஇ பற்று

அதாவது போதைக்கு அடிமையானவனை திருத்த முயல்வது குளத்தில் விழுந்தவனை விளக்கு கொண்டு தேடுதல் போலாகும். மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகுவதற்கான பிரதான காரணமாக அமைவது அவர்களின் வீட்டுச்சூழல் வீட்டில் வசிக்கும் யாராவது ஒருவர் மதுபானம், புகையிலை போன்றவற்றை பயன்படுத்துவோராக இருந்தால் அவ்வீட்டில் வசிக்கும் சிறுவர்களும் அதனை பயன்படுத்த தூண்டப்படுவர் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் வீட்டிற்கு வெளியே எவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள், யார் யாருடன் நட்பு கொள்கின்றார்கள் என கண்காணிக்க தவறி விடுகின்றார்கள் இதனால் போதைப் பொருட்களை விற்பனை செய்வோர்  இளம் வதான இளைஞர்களை இலக்கு வைத்து தமது வியாபாரத்தை மேற்கொள்ள இலகுவாக உள்ளது. இலங்கை புள்ளி விபரத்தினைக்களத்தின் தரவின்படி வடக்கு மாகாணத்திலேயே அதிகரித்த போதைப்பொருள் பாவனை குறித்து நிற்கின்றது இதற்கு காரணம் யுத்தம் வெளிநாட்டு பண அனுப்பல்கள் மற்றும் நாகரீகம் என்பனவாகும்.

  போதைப் பழக்கம் சமூகத்தின் சாபக்கேடாக மாறிவருகிறது உலகம் முழுவதும் 2.30கோடி மக்கள் பல்வேறு வகையான போதைப் பொருட்களை பயன்படுத்துவதாக ஜக்கிய நாடுகளின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. நகர்ப்புறங்களில் போதைப்பொருள் பழக்கமானது ஆண்கள் மட்டுமன்றி பெண்களிடத்திலும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகளான, சொந்த வீட்டிலேயே திருடுதல், பொருட்களை எடுத்து அடகு வைப்பது, பிச்சை எடுப்பது, அசிங்கமாக நடந்து கொள்வது, பிறரைத்துன்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். வெளியிடங்களில் அடிதடி, கொலை, கொள்ளை, தீவிரவாதம் மற்றும் பாலியல் தொந்தரவுகள் செய்வது போன்ற வன்முறை செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.                            

உணவு உட்கொள்ள முடியாமல் வயிற்றுல் புண், எடை குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல்சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது மூளையில் ஏற்படும் பாதிப்புக்களால் தானாகவே பேசிக்கொள்வது, பயம், மனச்சோர்வு,சிந்தனைத்திறன் குறைவு, ஞாபகமறதி, போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றது. உடலிலுள்ள விற்றமின்கள் அழிவடையச் செய்யும் கல்லீரல், இதயம் சார்ந்த பிரச்சினை, கொலஸ்ரோல், நீரிழிவு, இரத்த அழுத்தம்,சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் உருவாகின்றது.

போதைப்பாவனை நஞ்சுக்கு ஒப்பானதாகும் என்பதையும் வள்ளுவர் எடுத்துக் கூறியுள்ளார்.

                         “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்; எஞ்ஞான்றும்

                           நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

போதை பழக்கம் உடையவர்கள் செய்கிற குற்றச் செயல்களால் முதலில் குடும்ப உறுப்பினர்களே பாதிக்கப்படுகின்றனர். இதனால்  சமூகத்தில் மரியாதை குறைவு, சமூகப்புறக்கணிப்பு என்பவற்றை சந்திக்க நேரிடும். இதனையே வள்ளுவர் கள்ளுண்ணாமை எனும் அதிகாரத்தில் உள்ள பின்வரும் குறட்பா விளக்குகிறது.

                        உட்கப்படா அர்; ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

                         கட்காதல் கொண்டொழுகு வார்

அதாவது என்றும் கள்ளின் மீது விருப்பமுடன் இருப்பவர் பிறர் முன் மதிப்பை இழப்பார் இழிவான செயலுக்கு வெட்கப்படவு மாட்டார்.

முன்னோரு காலத்தில் போதைப்பொருட்களை காணக்கிடைப்பது அரிதாக காணப்பட்டது. ஆனால தற்போது வீதிகளில் காணப்படும் சிறு கடைகள் தொடங்கி அனைத்து கடைகளிலும் மதுபானங்களும், சிகரட், புகையிலை போன்ற புகைத்தல் பொருட்களும் விற்பனை செய்கின்றனர். இதனை தடுக்க கடுமையான சட்டத்திட்டங்கள் இயற்றப்பட்டுள்ள போதும் அதனை கட்டுப்படுத்துவது என்பது சவாலாக ஒன்றாகவே காணப்படுகின்றது.

பொது இடங்களில் மதுபானம் அருந்துவதோ சிகரட் புகைப்பதோ கூடாது என்பது பரவலாக கடைப்பிடிக்கப்படும் விதிமுறை ஆனால் அதனை புறக்கணித்து சமூக அக்கறையற்று பொது மக்கள் கூடும் இடங்களில் இத்தகைய தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை காணலாம். இதற்கெல்லாம் முதற்காரணமாக போதைப் பொருட்களின் கிடைப்பனவை மட்டுப்படுத்தினால் மாத்திரமே போதையற்ற சமூதாயத்தை உருவாக்க முடியும் சாதாரண மக்களின் வாழ்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது சினிமா சிலர் திரைப்படங்களில் குடிபோதை காட்சிகளை நாகரீகமாக கருதி போதைக்கு அடிமையாகின்றனர் படங்களில் அவ்வாறான காட்சிகளும் வைக்காது சமூக அக்கறையோடு நடந்து கொள்ளல் அவசியமாகும். போதைப்பொருட்களுக்கு அதிக வரியை விதித்தல், சட்டத்திட்டங்கள் கடுமையாக்குதல்  போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான வழியாகும்.

போதைப் பழக்கத்திற்கு ஒருவர் அடிமையாகிவிட்டராயின் அவர் நினைத்தால் அப் பழக்கத்திலிருந்து மீள எழுந்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும். பெற்றோர்கள் தம் பிள்ளைகள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்கள் என அறிந்து கொண்டால் அவர்களை குற்றம் சொல்வதோ தண்டிப்பது கூடாது மாறாக அரவணைத்து இதனால் ஏற்படும் பின் விளைவுகளை எடுத்து கூறி அவர்களை அப்பழக்கத்தில் இருந்து சிறிது சிறிதாக வெளி கொண்டு வரவேண்டும் மறுவாழ்வு மையங்கள் ஊடாக முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் போதையிலிருந்து மீண்டுவர முடியும்.

நாடடிற்கும்; குடும்பத்திற்கும் கேடு விளைவிற்கும் போதைப் பொருட்களின் பாவனையை தடுத்து நிறுத்துவதோடு அவற்றை முழுதாக ஒழக்க வேண்டும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்போருக்கு சிறை தண்டனை வழங்குவதோடு பதினெட்டு வயதிற்கு குறைவானோர்க்கு மதுபானம், சிகரட் போன்றவற்றை விற்பனை செய்வோருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் இவ்வாறு அரசோடு சேர்ந்து இளம் சமூதாயமாகிய நாமும் விழிப்புணர்வுடன் செயற்பட்டு போதைப் பாவனையற்ற நாட்டை கட்டியெழுப்புவோம்.

நாளைய தலைவர்களாக துறைசார் நிபுணர்களாக சமூதாயத்தையும் தேசத்தையும் நல்வழிப்படுத்தும் முன்னோடிகளாக மாறவுள்ள மாணவர்கள் போதையின் பிடிக்குள் சிக்குவதற்கு சமூகத்திற்கு ஆபத்தானது எனவே மக்களை பாதுகாக்க வேண்டும். நமது வாழ்வு இறைவன் நமக்கு அளித்த மாபெரும் கொடை இதை பாதுகாத்து பல வித நல்ல செயல்களை செய்து இறைவனுக்கும் நம்முடன் வாழும் மற்றவர்களுக்கும் பெருமை சேர்ப்பது நமது கடமை என்பதை உணர்ந்து செயற்பட வேணடும்.